'அறிவாலயத்துல ஒ ரு அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுங்கண்ணா... தலைவருக்கு முன்னாடி உட்கட்சி துரோகிகள் முகத்தை கிழிச்சுட்டு, கூண்டோட ராஜினாமா பண்ணிட்டு வந்துடலாம், நாங்க ரெடி!' என்று கழகத்தினுள் பெரிய கலகம் செய்ய பொங்கி எழுந்துள்ளனர் ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள்.
விவகாரம் இதுதான்... ஈரோடு தி.மு.க. மத்திய மாவட்டச் செயலாளராக இருப்பவர் தோப்பு வெங்கடாசலம். முன்பு அ.தி.மு.க.வில் அமைச்சராக கோலோச்சியவர், பின் தாய்க்கழகத்தில் இணைந்ததால் அவருக்கு தனி மாவட்டம் உள்ளிட்ட அந்தஸ்துகளை கொடுத்து கௌரவப்படுத்தினார் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் சீட் வாங்கிய தோப்பு, ஸ்டாலின். பக்கத்தில் இருக்கும் பவானி தொகுதிக்கும் பொறுப்பாளராக இருந்து பணத்தை அள்ளி இறைத்தார். ஆனால், இரண்டிலுமே தோல்வியே மிஞ்சியது.
இந்த நிலையில்தான், பெருந்துறை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயக்குமார் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.வில் இணைந்தார். இந்த சூழலில், கடந்த ஜூன் 29ம் தேதி மாலை, தோப்பு வெங்கடாசலம், மாவட்ட நிர்வாகிகளை அழைத்து பெருந்துறையில் ரகசியக் கூட்டம் போட்டார். அப்போது பேசிய தோப்பு வெங்கடாசலம், 'தி.மு.க.வுக்காக உழைப்பு, கணக்கு வழக்கில்லா பணம்னு எல்லாவற்றையும் கொட்டினேன்.
எனக்கு முன்னாடி இங்கே நிர்வாகம் பண்ணிய முத்துசாமி ஒரு ஊழியர் கூட்டம்கூட போடல. ஆனா,நான் ஒரே வருஷத்துல 96 கூட்டம் போட்டேன். பேரூராட்சித் தேர்தல்கள்ல கட்சி ஜெயிக்க பணத்தை அள்ளிக் கொடுத்தேன். ஆனா, என்னை மோசமா தோற்கடிச்சுட்டாங்க. இடைத்தேர்தல்ல இங்கே யாருக்கு வேணும்னாலும் தலைமை சீட் கொடுக்கட்டும், ஆனா, கடந்த முறை இங்கே ஏன் தோத்தோம்? உங்க மனசாட்சியை தொட்டு ஓபனா சொல்லுங்க' என்று கேட்க நிர்வாகிகள் பொங்கி எழுந்திருக்கின்றனர்.
பெருந்துறை, பவானியில் நாம தோற்பதற்கு விஜய் அலையோ அல்லது இரட்டை இலையோ காரணமில்லை. முழுக்க முழுக்க நம்ம கட்சிக் காரங்கதான். ஐந்து வருஷமா கட்சி வளர்ச்சிக்கு குழி பறிச்ச கூட்டம், தேர்தல்ல பச்சதுரோகத்தை பண்ணி மொத்த மாவட்டத்துலேயும் தி.மு.க. சோலிய முடிச்சுட்டாங்க' என்று பலரும் கொதித்திருக்கின்றனர். உடனே சிலர், 'துரோகிகள் யாருன்னு ஓபனா பேரை சொல்லி பேசுங்கப்பா? என்று கொக்கிப் போட்டனர்.
உடனே 'வேற யாரு? அமைச்சரா இருந்த முத்துசாமியும், அவரோட ஆளுங்களும்தான். இதை தலைவர் ஸ்டாலின், சின்னவர் உதயநிதி முகத்துக்கு நேரா நின்னு சொல்லவும், எழுதியே தரவும் நாங்க ரெடி, 'பெருந்துறையில தோப்பு வெங்கடாசலம் ஜெயிச்சிடக்கூடாது, ஜெயிச்சுட்டா அவரு அமைச்சராகிடுவார், நாம டம்மியாகிடுவோமி'னு சொல்லி, கட்சியில தோப்பு இணைந்த நாளில் இருந்தே உள்ளடி வேலைகளை துவக்கிட்டாங்க.
நம்ம ஆட்சிக்காலத்துல பெருந்துறை தொகுதிக்கு எந்த நல்லதையும் செய்யவிடலை. விவசாயத்தை காப்பாத்த தண்ணி கேட்டு பல முறை விவசாயிகள் அழுதாங்க, ஆனா, மனமிறங்கி தண்ணி திறந்துவிடலை. தண்ணிய திறந்துவிட்டா, அந்த நல்ல பெயர் தோப்புக்கு போயிடுமோன்னு பயம். தி.மு.க. தலித் பெண் உள்ளாட்சித் தலைவர் ஒருத்தவங்க தன்னோட கணவருக்கு டாஸ்மாக்ல டிரான்ஸ்ஃபர் கேட்டு பல மாசமா கதறுனாங்க. முத்துசாமி மனம் இரங்கலை. இது மட்டுமா? குடிதண்ணீர் தொடங்கி கேன்சர் அபாயம் உள்ள சிப்காட் ரசாயன ஆலைகள் வரை மக்கள் எதுக்கு போராடுனாலும் கடுமையான செக்ஷன்ல கேஸ் போட்டு இந்த தொகுதி தி.மு.க. பெயரை கெடுத்த கூட்டம் அது.
இதையெல்லாம் தாண்டி, தேர்தல்ல அ.தி.மு.க. வேட்பாளருக்கு தேர்தல் செலவுக்கு கோடிக்கணக்குல பணம் கொடுத்து, தி.மு.க.வை முடிச்சு விடுற வேலையையும் பார்த்திருக்காங்க. இதை அ.தி.மு.க.காரனே நம்மகிட்ட சொல்லி சிரிக்கிறான். அப்போ எவ்ளோ வன்மம் இருக்கணும் இந்த துரோகிகளுக்கு' என்று கொதித்திருக்கின்றனர்.
உடனே எழுந்த தோப்பு வெங்கடாசலம், 'இதுக்கு பிறகும் நான் பொறுமை காத்துட்டுக்கிருந்தா அதுக்கு வேற பெயராகிடும்.
நிறைந்த பௌர்ணமி நாள்ல சொல்றேன்... நான் என் பதவியை ராஜினாமா பண்ணிட்டுறேனுங்க, அவங்களுக்கு தோதான மாவட்டச் செயலாளரை போட்டு,அப்புறமாவது துரோக அரசியல் பண்ணாம கட்சியை ஜெயிக்க வைக்கட்டும்' என சொல்லிவிட்டு கார் ஏறியிருக்கிறார். உடனே நிர்வாகிகள் அவர் கார் முன் தரையில் உட்கார்ந்து 'நீங்க ஏன் ராஜினாமா பண்ணணும்? துரோகிகளை தலைவர் உடனடியாக களையெடுக்கணும்.
இல்லேண்ணா வாங்க, அறிவாலயம் போய் தலைவர்கிட்ட அத்தனையையும் கொட்டிட்டு இரண்டு தொகுதி நிர்வாகிகளும் கூண்டோட பண்ணிடலாம்' என்று ஒரு மணி நேரமாக கொதித்திருக்கின்றனர். இதற்கிடையே, இந்த களேபரத்தையெல்லாம், 'என்ன பாஸ் செட்டிங்ஸா?' என்று எதிர் டீம் தி.மு.க.வினர் கிண்டலடிக்க, விஷயம் இன்னும் வீரியமடைந்திருக்கிறது.
இதுபற்றி நாம் தோப்பு வெங்கடாசலத்திடம் பேசியபோது "இவ்வளவு மோசமான அரசியல் வன்மத்தை நான் எங்குமே பார்த்ததில்லைங்க. தி.மு.க. வேட்பாளரான என்னை தோற்கடிக்க அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஐம்பது லட்சம், ஒரு கோடின்னு தி.மு.க. புள்ளியே கொடுத்தார்னு நிர்வாகிகள் ஆணித்தரமா சொல்றாங்க. எதிரிகளை வீழ்த்திடலாம், துரோகிகளோடு வாழமுடியாது. அதனால்தான் ராஜினாமா செய்ய நினைக்கிறேன்" என்றார்.
முன்னாள் அமைச்சர் முத்துசாமியிடம் இந்த விவகாரம் பற்றி பேசியபோது, 'தேர்தல் தோல்வியால் எல்லோரும்தான் வருத்தத்தில் இருக்கிறோம். அதற்காக அடுத்த நபர் மேல அபாண்ட பொய் குற்றச்சாட்டுகளை சொல்வதா? வளர்ச்சி அரசியல்தான் இந்த முத்துசாமியின் வாழ்க்கை, துரோகமல்ல. யாரும், யார் மீதும் ஆதாரமற்ற எந்த புகாரையும் சொல்லலாம். ஆனால் விசாரணையில்
உண்மை வந்துதானே தீரும் என்றார்.
கவனிங்க ஸ்டாலின் சார்!