இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் (SIR) பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும், தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும், படிவம் 6 தொடர்பாகவும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் அக்டோபர் 10-ஆம் தேதி போராட்டம் நடத்த சிஜேபி மற்றும் இந்திய மாணவர் சங்கமான ஏஐஎஸ்ஏ ஆகியவை அழைப்பு விடுத்திருந்தன. இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் ஆதரவு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்தப் போராட்டத்துக்கு டெல்லி காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. மேலும், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டிருந்தனர்.
இதற்கிடையே, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி அங்கு நுழைந்ததாகக் கூறி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிர்வாகிகள் அஷுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அஜிங்கியா பிணைப் பத்திரத்தில் கையொப்பமிட்ட பிறகு விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ததைக் கண்டித்து, அக்டோபர் 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் தேசியக் கொடியுடன் பேரணி நடத்தப்போவதாக சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அபிஜித் தீப்கே தங்கியிருந்த பகுதிக்குச் சென்ற பெண் காவலர்கள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள், போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என அவருக்கு நோட்டீஸ் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காவல்துறையின் தடையையும் மீறிப் போராட்டத்தில் பங்கேற்க வீட்டிலிருந்து புறப்பட்ட அபிஜித் தீப்கேவை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
மேலும், போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஜந்தர் மந்தர் பகுதியில் இணையச் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் தொடர்பாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
போராட்டத்தைக் கைவிட வேண்டாம்: அபிஜித் தீப்கே
இதற்கிடையே, ஏற்கனவே அபிஜித் தீப்கே வெளியிட்டுள்ள காணொளியில், “நாளை (சனிக்கிழமை) காலை நான் டெல்லி வருகிறேன். அதன்பிறகு என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது. என்னைக் கைது செய்வது குறித்து நான் அச்சப்படவில்லை. நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே நாம் போராடுகிறோம். எஸ்ஐஆர் நடவடிக்கை திரும்பப் பெறப்படாமலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகாமலும் இது சாத்தியமாகாது.
நான் கைது செய்யப்பட்டாலும் போராட்டத்தை நிறுத்தக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன். இது இந்திய அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கான போராட்டம். நாம் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும், பொறுப்புமிக்க, அமைதியை விரும்பும் குடிமக்கள். இந்தப் பேரணி அமைதியான முறையில் நடைபெற வேண்டும். மகாத்மா காந்தியின் வழியில் நாம் பயணிக்கிறோம். இந்தப் போராட்டம் வெற்றி பெறும் என நம்புகிறேன். அதற்கான பொறுப்பு நம்மிடம் உள்ளது. குறிப்பாக பாஜக அரசுக்கு அஞ்சமாட்டேன்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.