எடப்பாடி பழனிசாமி மனு - தயாநிதிமாறன் எம்.பி ஆட்சேபம்

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான வாதங்களுக்காக, அவதூறு வழக்கு விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Nov 6, 2024 - 00:18
 0
எடப்பாடி பழனிசாமி மனு - தயாநிதிமாறன் எம்.பி ஆட்சேபம்

அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை ஏற்கக் கூடாது என திமுக எம்.பி தயாநிதிமாறன் தரப்பில் ஆட்சேபம் தெரிவித்து, எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத்தேர்தலின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை எனக் கூறிருந்தார். 

இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக  அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என ஆட்சேபம் தெரிவித்து, தயாநிதி மாறன் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில், புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா எனும் பி.என்.எஸ்.எஸ். அமலுக்கு வரும் முன்பே இந்த அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், அதனால் அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி பி.என்.எஸ்.எஸ். சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை ஏற்றுக் கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றச்சாட்டுகள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாசித்து காட்டப்பட்டு விட்டதால், வழக்கில் இருந்து விடுவிக்க கோர முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான வாதங்களுக்காக, அவதூறு வழக்கு விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow