சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் சிஏ படித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிமுக அம்மா பேரவை தென்சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் திருமுருகன் என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் வற்புறுத்தியுள்ளார்.
மேலும், இளம்பெண் கல்லூரி செல்லும் சாலை வழியில் பலமுறை நின்று தொந்தரவு செய்ததுடன் வீட்டுக்கும் சென்றும் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவரிடம் இருந்து தப்பிக்க கோடம்பாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கி கொண்டு அங்கிருந்து கல்லூரி படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி இளம்பெண் கல்லூரி செல்லும்போது தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் மிரட்டல் விடுத்து ஆபாசமாக பேசியுள்ளார். மேலும், திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் முகத்தில் ஆசிட் அடித்து விடுவேன் என கூறி அதிமுக நிர்வாகி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அதிமுக அம்மா பேரவை, தென் சென்னை மாவட்டச் செயலாளரான கண்ணம்மாபேட்டையைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் சீண்டல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் அமைந்தகரை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பிறகு அதிமுக நிர்வாகி திருமுருகனை அமைந்தகரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட திருமுருகனிடம் அமைந்தகரை போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.