நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எல்ஐசி பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவரது மகன் கவின்ராஜ் இவர் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் நிலையில் நேற்று கழிவறையில் மயங்கி விழுந்ததாக கூறி ஆசிரியர்கள் சக மாணவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கவின்ராஜ் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்ததை அடுத்து மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.சம்பவம் தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், சக மாணவர்களிடையே தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கவின்ராஜுக்கும் பள்ளியில் பயிலும் சக மாணவனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் இந்த நிலையில் மீண்டும் நேற்று கவின்ராஜ் மற்றும் சக மாணவனுக்கு இடையே மோதல் ஏற்பட்டபோது கவின்ராஜை மற்றொரு மாணவன் மார்பு பகுதி,கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலில் ஈடுபட்ட சக மாணவனை ராசிபுரம் காவல்துறையினர் கைது செய்து குழந்தைகள் நல காப்பகத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தற்போது மாணவன் உயிரிழந்த பள்ளியில் பள்ளி கல்வி இணை இயக்குனர் முருகன் ஆய்வு மேற்கொண்டார்.