சென்னை தி. நகர் நாகேஷ்வராவ் தெருவில் செயல்பட்டு வரும் பிரபல துணிக்கடைகளில் ஒன்று குமரன் சில்க்ஸ் கடை, இந்த கடையின் 4 வது தளத்தில் செயல்பட்டு வரும் பெண்களுக்கான ஆடைகள் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 17 ஆம் தேதி காலை கடையை திறந்த போது அந்த தளத்தின் மேற்கூரை (பால் சீலிங்) உடைக்கப்பட்டு கல்லாபெட்டியில் இருந்த 9 லட்சம் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. மாம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை கடையில் பணியாற்றும் ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள், ஏசி மெக்கானிக் என 100 மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 16 ஆம் தேதி இரவு குமரன் சில்க்ஸில் கடையை மூடும் போது பவர் ஆப் செய்து விட்டு சென்றதால் சிசிடிவி காட்சிகள் வேலை செய்யாததால் அருகில் உள்ள கட்டிடங்களில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் முதலில் கொள்ளையன் போத்தீஸ் சில்க்ஸ் கடையில் புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டு ஏசி வெண்டிலேட்டர் வழியாக சென்றதும், அங்கு சிசிடிவி கேமராக்களை கண்டதும், பக்கத்து மாடி தாவி குமரன் சில்க்ஸ் கடையின் நான்காவது மாடிக்கு ஏசி வெண்டிலேட்டர் வழியாக உள்ளே சென்று பால்சீலிங்கை உடைத்து 9 லட்சம் கொள்ளையடித்து இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போத்தீஸ் சிசிடிவியில் பதிவான காட்சியில் முகமூடி அணிந்து வடமாநில நபர் போல இருந்ததாகவும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போதும் அதில் முகத்தை மறைத்தே செல்வதாகவும், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத்தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளதாக மாம்பலம் போலீசார் தெரிவிக்கின்றனர். போத்தீஸ் கடையில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் எளிதாக கடைக்குள் புகுந்து, அங்கிருந்து ஸ்பைடர் மேன் போல மாடி தாவி வந்து கொள்ளையடித்திருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதே போல சென்னை சவுகார்பேட்டை, மிண்ட் தெருவில் "நியூ மந்திர் ஜெயின் கோவில்" உள்ளது. 70 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்த பிரசித்தி பெற்ற கோவிலில் கடந்த 14 ஆம் தேதி அதிகாலை முகமூடி அணிந்து கோவிலின் அருகே உள்ள கட்டிதத்தின் பக்கவாட்டு சுவற்றின் வழியாக கோவில் சுவற்றை படிக்கட்டுகளாக மாற்றி உள்ளே இறங்கி கோவில் கதவின் பூட்டை உடைத்தும், சுவாமி சிலைகள் வைக்கப்பட்டு இருந்த அறைக்கதவின் பூட்டை உடைத்தும் 600 கிராம் தங்கம் மற்றும் 10 கிலோ வெள்ளி பொருட்கள் என 40 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்து சென்றதும் தெரியவந்துள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்திலும் கொள்ளையன் முகத்தை மறைத்து முகமூடி அணிந்து கொள்ளை அடித்ததும், கொள்ளை அடித்து நடந்தே சென்னை புறநகர் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து சென்றதும் தெரியவந்துள்ளது. 5 மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுப்பட்டதும் வடமாநில கொள்ளையன் என்பதும் முகம் முழுவதும் மூடி இருப்பதால் யார் என கண்டுப்பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இரண்டு கொள்ளை சம்பவங்களும் சென்னையின் முக்கிய பகுதிகளில் நடைப்பெற்றுள்ளதும், அதுவும் உயரமான கட்டிடங்கள் அருகே அருகே உள்ள நிலையில் அசால்ட்டாக உள்ளே புகுந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதும், முகமூடி அணிந்து போலீசாரால் அவர்களை அடையாளம் காணமுடியாத விதத்தில் இரண்டு நாட்கள் இடைவெளியில் நடந்தேறியுள்ளது சென்னைவாசிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இரண்டு கொள்ளை சம்பவத்திலும் ஈடுப்பட்டுள்ளது ஒரே கும்பலா என்ற கோணத்திலும் விசாரணையை முன்னெடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நுங்கம்பாக்கத்தில் தொழில் அதிபர் வீட்டில் 1 கோடி மதிப்பிலான நகைகளை சனவரி 1 ஆம் தேதி கொள்ளை அடிக்கப்பட்டது அதில் இது வரை குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தற்போது இந்த இரண்டு கொள்ளை சம்வங்களும் போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.