சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த மேட்டுடையார்பாளையம் புதுகாலனி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுவேல். 45 வயதான இவர், கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். பொன்னுவேலுவுக்கு வசந்தி என்பவருடன் திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர். 21 வயதான மூத்த மகன் கவின், கட்டட வேலை செய்து வர, பதினேழு வயதான இரண்டாவது மகன் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வசந்தி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டே இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே வசந்திக்கு அவரது மகன் போன் செய்துள்ளார். அப்போது வசந்தியின் செல்போன் பிஸியாகவே இருந்துள்ளது. நீண்ட நேரமாக இப்படி பிஸியாகவே இருந்ததால், வசந்தி மீது அவரது குடும்பத்தினரே கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இதுகுறித்து, கணவன் பொன்வேலுவும் மகன்கள் இருவரும் சேர்ந்து வசந்தியிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். வாக்குவாதத்தில் தொடங்கிய இந்த சண்டை, ஒருகட்டத்தில் எல்லை மீறியதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கணவனும் இரண்டு மகன்களும், வீட்டில் இருந்த வசந்தியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் மயக்கமடைந்த வசந்தியை மீட்ட அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வசந்தியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வசந்தியின் உறவினர்கள் கொடுத்த புகாரில், வசந்தியின் கணவனையும், அவரது மகன்களையும் பிடித்து ஏத்தாப்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேசித் தீர்க்க வேண்டிய விஷயத்துக்கெல்லாம், இப்படி கொலை செய்வதால் எந்தத் தீர்வும் கிடைக்காது என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாராணமாகியுள்ளது. செல்போனில் பேசியதற்காக, குடும்பமே சேர்ந்து பெண்ணை அடித்துக் கொலை செய்துள்ளது, அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.