தமிழ்நாடு

சந்தேகம் கேட்டால் இப்படியா? மாணவியிடம் ஆபாச பேச்சு ஆசிரியர் அத்துமீறல்... போக்சோவில் கைது!

வயதுக்கு தகுந்த பொறுப்பில்லாமல், மாணவியிடம் ஆபாசமாக பேசிய அரசுப் பள்ளி ஆசிரியரை, போலீஸார் போக்சோவில் கைது செய்துள்ளனர். நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

சந்தேகம் கேட்டால் இப்படியா? மாணவியிடம் ஆபாச பேச்சு ஆசிரியர் அத்துமீறல்... போக்சோவில் கைது!
சந்தேகம் கேட்டால் இப்படியா? மாணவியிடம் ஆபாச பேச்சு ஆசிரியர் அத்துமீறல்... போக்சோவில் கைது!

நாமக்கல்லில் இருந்து துறையூர் செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பொட்டிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் ஆசிரியராக பணியாற்றுகிறார். 52 வயதான இவர், மாணவிகளிடம் தகாத முறையில் ஆபாசமாக பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது, கடந்த 10ம் தேதி, 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்துள்ளார் செல்வக்குமார். அப்போது மாணவி ஒருவர், ஆங்கில வார்த்தையான I am go to Sleeping என்ற வார்த்தைக்கு, தமிழில் என்ன அர்த்தம் சார் எனக் கேட்டுள்ளார். அதற்கு ஆசிரியர் செல்வக்குமார் விஷமமாக விளக்கம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதாவது, “நீயும் நானும் கொல்லிமலைக்கு சென்று ரூம் போட்டு தூங்கலாம்” இது தான் அர்த்தம் என சொன்னதாக தெரிகிறது. ஆசிரியர் இப்படி சொன்னதற்கு என்ன அர்த்தம் என தெரியாமல் முழித்த அந்த மாணவி, இதுகுறித்து வீட்டிற்கு போனதும் அவரது அம்மாவிடம் கேட்டுள்ளார். 

இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர், பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் ஆகியோரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், தலைமை ஆசிரியரும் பள்ளி நிர்வாகமும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியான அந்த மாணவியின் பெற்றோரும், உறவினர்களும், பள்ளியை முற்றுகையிட்டு, ஆசிரியர் செல்வக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த நாமக்கல் போலீசார், முதலில் பெற்றோர்களிடம் சமரசம் பேசினர். ஆனால், மாணவியின் பெற்றோர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸார் ஆசிரியர் செல்வக்குமாரை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துகொண்டிருந்த பாலியல் குற்றங்கள், இப்போது தொடர்கதையாகி வருவது, பெற்றோர்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.