சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த திருத்தணியை சேர்ந்த மாணவர் சுந்தர், கடந்த அக்டோபர் 4ம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். அவரை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி மாணவர் சுந்தர் மரணம் அடைந்தார். இதையடுத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் சந்துரு என்பவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா தலைமையில், இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அடிதடியில் ஈடுபட்டதாக கடந்த பத்தாண்டுகளில் சென்னைக் கல்லூரி மானவர்கள் மீது 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில், 33 வழக்குகள் ரயில்வே போலீசார் பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வித்துறை செயலாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மோதல் சம்பவங்களை தடுக்க மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரியின் முதல்வர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.