சாட்டையை சுழற்றும் சென்னை போலீஸ் கமிஷனர்.. 7 நாளில் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு சென்னை போலீஸ் கமிஷனராக அருண் ஐ.பி.எஸ் பதவியேற்றார். அதிரடிக்கு பெயர் போன இவர் ரவுடிகளுக்கு அவர்களின் புரியும் மொழியில் பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி இரவு பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் முன்பு நின்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னை மாநகரில், அதுவும் காவல் நிலையம் அருகே நடந்த இந்த கொலை தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு ரவுடிகள் வரிசையாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையில் பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவர்களையும் போலீசார் தொடர்ந்து களையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் கடந்த 7 நாட்களில் மட்டும் 23 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின்பேரில், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 25.08.2024 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட 482 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 134 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 199 குற்றவாளிகள்,
குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 29 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 7 குற்றவாளிகள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் 7 குற்றவாளிகள், பாலியல் தொழில் நடத்திய 17 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் படுத்திய 6 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் 4 குற்றவாளிகள் என மொத்தம் 885 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 19.08.2024 முதல் 25.08.2024 வரையிலான 7 நாட்களில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என கூறப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு சென்னை போலீஸ் கமிஷனராக அருண் ஐ.பி.எஸ் பதவியேற்றார். அதிரடிக்கு பெயர் போன இவர் ரவுடிகளுக்கு அவர்களின் புரியும் மொழியில் பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் தமிழ்நாட்டில் ரவுடிகளை சுட்டு பிடித்தல், என்கவுண்ட்டர் செய்தல் போன்ற அதிரடி நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?