சென்னை கோட்டூர்புரத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில், 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், 3 பேருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.
காதல் விவகாரம்
சென்னை கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அருண் மற்றும் அவரது நண்பர் படப்பை சுரேஷ் போதையில் தூங்கி கொண்டிருந்த போது, நேற்றுமுன்தினம் ஒரு கும்பல் வெட்டி சாய்த்தது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் கொலையை அரங்கேற்றியது ரவுடி சுக்கு காப்பி சுரேஷ் என்பதும் தெரியவந்தது. குறிப்பாக அருண் மற்றும் சுக்கு காப்பி சுரேஷ் ஆகியோர் நண்பர்களாக பழகி வந்த நிலையில், சுரேஷ் சாயின்ஷாவை என்பவரை காதலித்து வந்துள்ளார். பின் நாளில் சாயின்ஷாவை அருண் அபகரித்து காதலித்து வந்ததால் சுக்கு காப்பி சுரேஷ் மற்றும் அருணுக்கு இடையே பகை உண்டாகியதாக கூறப்படுகிறது.
இரட்டை கொலை
இந்த கோபத்தில் சாயின்ஷா என்ற பெண்ணை கடந்த 2022ஆம் ஆண்டு சுக்கு காப்பி சுரேஷ் கொலை செய்தார். இதனால் அருண் மற்றும் அவரது அண்ணன் அர்ஜூனன் ஆகியோர் சுக்கு காப்பி சுரேஷை கொலை செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில், முந்திக்கொண்ட சுக்கு காப்பி சுரேஷ் நேற்று முன்தினம் கூட்டாளியுடன் வந்து கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது.
குறிப்பாக தலைக்குப்புறபடுத்து உறங்கியதால் அர்ஜூனன் என நினைத்து படப்பை சுரேஷை தெரியாமல் வெட்டிக்கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் வெட்டி கொலை செய்யும் போது அருணிடம் நான் சுக்கு காப்பி சுரேஷ் தான் வெட்டுறேன் என கூறிக்கொண்டு வெட்டியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவுக்கட்டு
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படைகள் மூன்று அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், 13 நபர்களை சேலத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.சுக்கு காபி சுரேஷ், விக்னேஷ், சண்முகம், ஜீவன் ராசுக்குட்டி, மனோஜ், ஜெபஸ்டின், சித்தா, ஷாம், லோகேஷ் குமார், தருண், சூரிய பிரகாஷ் மற்றும் இரண்டு சிறார்கள் என மொத்தம் 13 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் சுக்கு காபி சுரேஷ், விக்னேஷ், ராசுகுட்டி ஆகிய மூன்று நபர்களுக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.