இன்ஸ்டாவில் பழகிய 2 மாணவிகள் மாயம்... ஆண் நண்பரிடம் தீவிர விசாரணை
இன்ஸ்டாகிராமில் பழக்கமான நபரிடம் பேசி வருவதை பெற்றோர் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகள் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் பத்தாம் வகுப்பு படித்துவரும், இரண்டு சிறுமிகள் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் பழக்கமான ஆண் நபருடன் பேசி வந்துள்ளனர். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் கண்டித்ததால் இருவரும் நேற்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
புகாரின் பேரில் எம்ஜிஆர் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் எண்ணூர் பகுதியைச் சேர்ந்த தருண் என்பருடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்ததும், நேற்று பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு தருணை சந்திப்பதற்காக எண்ணூர் சென்றதும் தெரியவந்தது.
தருண் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தனக்கு நேற்று பிறந்தநாள் எனவும் அதற்காக இருவரும் தன்னை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக வந்ததாகவும், வாழ்த்து தெரிவித்துவிட்டு நேற்று மாலை வீட்டிற்கு செல்வதாக கூறி கோயம்பேடு பேருந்தில் இருவரும் ஏறி சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு பேருந்தில் ஏறியதாக சொல்லப்பட்ட சிறுமிகள் இருவரும் வீடு வந்து சேராததால் தருணை பிடித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளங்கள் ஒருபுறம் கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கும், அறிவினை விசாலமாக்கி கொள்வதற்குமான தளமாக இருந்துவரும் நிலையில், மறுபுறம் தங்களது குழந்தைகளை, இதுபோன்ற தவறான பாதையில் தள்ளிவருவதாக பெற்றோர்கள் புலம்பி வருகின்றனர்.
What's Your Reaction?