தமிழ்நாடு

கஞ்சா விற்பனை.. பண தகராறு... நண்பனை கும்பலாக தீர்த்துக்கட்டிய இளைஞர்

கஞ்சா விற்பனை பணத்தை கேட்டு ஏற்பட தகராறில் கஞ்சா போதையில் கும்பலுடன் சேர்ந்து நண்பனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா விற்பனை.. பண தகராறு... நண்பனை கும்பலாக தீர்த்துக்கட்டிய இளைஞர்
கஞ்சா போதையில் நண்பன் கொலை

சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட மண்ணூர்பேட்டை பெருமாள்கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜா மொய்தீன் (26). கயல் என்ற திருநங்கையை திருமணம் செய்துகொண்டு தனியாக வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வார காலமாக ஆவடி நந்தவன மேட்டூர் பகுதியில் தனது நண்பர் கார்த்திக்கேயேன் என்பவரது ரூமில் தங்கியுள்ளார்.

ராஜா மொய்தீனுக்கும், கார்த்திகேயனுகும் இடையே பணம் பிரித்து கொள்வதில் பிரச்சினை வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று இரவு இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. காலை அக்கம்பக்கத்தினர் பார்த்தபோது ராஜா மொய்தீன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து ஆவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ராஜா மொய்தீன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். ராஜா மொய்தீன் சமீபத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக போலீசில் சிக்கி சிறை சென்றதால் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றதால் நண்பர் கார்திக்கேயன் வீட்டில் தங்கி வந்துள்ளார்.

மேலும் கார்த்திக்கேயன் மற்றும் ராஜா மொய்தீன் ஆகியோரிடையே கஞ்சா விற்ற பணத்தை பிரித்துக் கொள்வதில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று கார்திக்கேயன் மற்றும் ராஜா மொய்தீன் ஆகியோர் கஞ்சா புகைத்துள்ளனர். அப்பொழுது இருவருக்கு இடையே பணம் குறித்து மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

அச்சமயத்தில் ராஜா மொய்தீன் என்னிடம் பிரச்சினை செய்யாதே உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார்திக்கேயன், பட்டாபிராம் பகுதியை சேர்ந்த தனது நண்பர் ஆசிஃப்பிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்ட ஆசிஃப் மற்றும் தனது நண்பர்களுடன் சேர்ந்து ராஜா மொய்தீனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டா கத்திகளை எடுத்து ராஜா மொய்தீனை தலை, கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜா மொய்தீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்த கார்த்திகேயன், ராஜசேகரன், லலித், லோகேஷ், அஜித், சாந்தகுமார், விக்னேஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆசிப்பை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் போதைப் பொருட்கள் மற்றும் கஞ்சா பொருட்கள் அதிகளவில் புழங்குவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், கஞ்சா விற்பனை செய்த பணத்தை பிறித்துக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில் நண்பனை தீர்த்துக்கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.