சென்னை புரசைவாக்கம் வெள்ளாள தெரு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் சரண்குமார். 32 வயதான சரண்குமார் திருமணமாகாத நிலையில் தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். மேலும், ஓ.எம்.ஆர். பகுதியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், சரண்குமார் நேற்று நள்ளிரவு வரை தனது பெண் தோழிக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். பெண் தோழியுடன் பேசிக் கொண்டிருந்த சரண்குமார் திடீரென பேசாததால் சந்தேகம் அடைந்து சரண்குமாரின் தோழி தொடர்பு கொண்டு உள்ளார்.
இதன் பின்னர், சரண்குமார் செல்போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்து தனது தோழியுடன் நேரடியாக சரண்குமார் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். வீடு திறந்த நிலையில் இருக்கிற காரணத்தினால் உள்ளே சென்று பார்க்கும் பொழுது மின்விசிறியில் சரண்குமார் புடவையை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சரண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் முதற்கட்டமாக விசாரணை மேற்கொண்டதில், வீட்டில் தாய், தந்தையர் இன்னும் படிக்க சென்றிருந்த நிலையில் தனியாக இருக்கும்போது சரண்குமார் தற்கொலை செய்து கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது. சரண்குமார் பல்வேறு செயலிககளை தனது விலை உயர்ந்த செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
குறிப்பாக ஆன்லைன் டிரேடிங் மற்றும் பிட்காயின் தொடர்பான செயலிகள் பலவற்றிலும் முதலீடு செய்யும் பழக்கம் இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதற்காக பணம் கடன் வாங்கி முதலீடு செய்திருப்பதாகவும் அந்த கடன் தொல்லை தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
சுமார் 60 லட்ச ரூபாய் வரை சரண்குமார் கடன் பெற்று ஆன்லைன் ரம்மி மற்றும் பிட்காயின் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்து இழந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறியுள்ளனர். இருப்பினும் சரண்குமாரின் செல்போனை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடன் கொடுத்தவர்கள் யாரேனும் பணத்தைக் கேட்டு மிரட்டினார்களா அதன் காரணமாக தற்கொலைக்கு தூண்டி சரண் தற்கொலை செய்து கொண்டாரா என்ற பல்வேறு கோணத்தில் கீழ்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.