தமிழ்நாடு

வைர நகைகளை திருடியது எப்படி? எதற்காக திருடினார்? பெண் ஊழியர் அதிர்ச்சி வாக்குமூலம்

ஆடம்பரத்திற்காகவும், சொகுசு வாழ்க்கைக்காகவும் நகைக் கடையில் வைர நகைகளை திருடி, போலியான நகைகளை வைத்துவிட்டு தப்பியதாக கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வைர நகைகளை திருடியது எப்படி?  எதற்காக திருடினார்? பெண் ஊழியர் அதிர்ச்சி வாக்குமூலம்
போலி நகைகளை வைத்து வைர நகைகளை திருடிய எப்படி? பெண் ஊழியரின் அதிர்ச்சி வாக்குமூலம்

சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் ஜெயின் சொந்தமாக நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பு கடந்த மாதம் 22ஆம் தேதி ரேவதி என்கிற பெண் வேலை கேட்டு வந்த நிலையில் அவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

வேலைக்கு சேர்ந்த ரேவதி இரண்டு நாட்கள் வேலைக்கு வந்த நிலையில் மூன்றாவது நாள் விடுப்பு எடுத்து, மீண்டும் கடைக்கு வந்துள்ளார். எதற்காக விடுப்பு எடுத்தாய் என கேள்வி கேட்டதற்கு தனது தாய்க்கு உடம்பு சரியில்லை என காரணம் கூறியுள்ளார். மீண்டும் இதேபோல் பணிக்கு 2, 3 நாட்கள் வருவது நடுவில் விடுப்பு எடுப்பது விடுப்பிற்கான ஏதாவது ஒரு காரணத்தை கூறிவந்துள்ளார்.

இந்த நிலையில் ரேவதி கடந்த 3 தேதியில் இருந்து கடைக்கு வேலைக்கு வராமல் நின்றுள்ளார். பிறகு வழக்கம்போல் கடையில் இருந்த பணியாளர்கள் வாடிக்கையாளர்களை நகைகள் குறித்து விளக்கி கூறுவது விளக்கம் அளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் குறிப்பிட்ட ஒரு மோதிரத்தை எடுத்து இந்த மோதிரம் சற்று வித்தியாசமாக இருக்கிறது எனவும், பார்ப்பதற்கு தங்கம் போல் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். உடனடியாக பணியில் இருந்த பணியாளர்கள் மோதிரத்தை எடுத்து சோதனை செய்து பார்த்தபோது அந்த மோதிரம் போலியானது என்பது தெரிய வந்ததை அடுத்து வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்டு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக கடையின் உரிமையாளர் சுரேஷ் ஜெயினுக்கு தெரிவித்ததை அடுத்து போலி மோதிரம் எப்படி கடைக்கு வந்தது? ஒரிஜினல் மோதிரம் எங்கே சென்றது? என சந்தேகம் அடைந்த நிலையில் கடையில் இருந்த நகைகளை சோதனை செய்து பார்த்துள்ளார்.

அப்பொழுது சுமார் ஆறு லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் போலியானவை என்பதை தெரியவரவே அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நிலையில் கடந்த மூன்றாம் தேதியில் இருந்து கடைக்கு வராத ரேவதி கடையில் உள்ள நகைகளை அதன் அருகே சென்று சுத்தம் செய்வது போன்ற சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தது.

அதனை கூர்ந்து கவனித்த பொழுது நகைக்கடையில் வேலைக்குச் சேர்ந்த ரேவதி, நகைகள் இருக்கும் இடத்தில் சுத்தம் செய்வது போல நடித்து கடையில் இருந்த ஒரிஜினல் தங்கம் மற்றும் வைர நகைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து அவைகளை தனியாக எடுத்துக்கொண்டு, அந்த இடத்தில் ஏற்கனவே தான் கொண்டு வந்த போலி நகைகளை அங்கு வைத்துக் கொண்டிருக்கும் காட்சிகள்  பதிவாகி இருந்தது.

இதனை அடுத்து கடையின் உரிமையாளரான சுரேஷ் தனது கடையில் இருந்த ஒரிஜினல் நகைகளை திருடி விட்டு போலி கடைக்கு வேலைக்கு வராமல் தப்பிச்சென்ற பெண்மணி குறித்து முதற்கட்டமாக சௌந்தரபாண்டி அங்காடி காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். மேலும், சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினரிடம் கொடுத்துள்ளார்.

மீண்டும் காவல் நிலையம் சென்று 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை காணவில்லை என இரண்டாவது முறையாகவும் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து கடையின் உரிமையாளர் சுரேஷ் ஜெயின் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு போலீசார் விசாரணை தொடங்கினர்.

முதற்கட்டமாக கடையின் உரிமையாளரான சுரேஷிடம் நகை கடைக்கு வேலைக்கு வந்த பெண்மணி குறித்து விசாரணை செய்த பொழுது, உருக்கமாக பேசி ஏமாற்றி அந்த பெண்மணி வேலைக்கு சேர்ந்ததாக தெரிவித்தார். மேலும் விசாரணையில் அந்தப் பெண்மணி வேலைக்கு சேர்த்ததற்கான ஆவணங்களையும் போலீசார் கேட்ட நிலையில் அதனையும் ஒப்படைத்தார்.

நகை கடையில் நகைகளை திருடிவிட்டு சென்ற பெண்மணி ரேவதி கொடுத்த ஆவணங்களை வைத்து விசாரணை செய்த பொழுது அவர் கொடுத்த ஆவணங்கள் அதில் உள்ள அவர் பெயர் மட்டுமே உண்மை என்றும் அதில் கூறப்பட்டுள்ள முகவரி அனைத்தும் போலியானவை என்பது தெரிய வந்துள்ளது.

பாண்டிபஜார் குற்றப்பிரிவு ஆய்வாளர் மணிமாலா தலைமையிலான தனிப்படை போலீசார் நகையை திருடி சென்ற பெண்மணி பிடிப்பதற்கு தீவிரமாக தேடி வந்துள்ளனர். ரேவதியை கண்டுபிடிப்பது போலீசாருக்கு மிகவும் சிக்கலாகவே இருந்துள்ளது. 

தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடையில் வேலைசெய்த அனைத்து பணியாளர்களுக்கும், அவர்கள் கடையில் கொடுத்து இருந்த யுபிஐ  முகவரிக்கு பணம் அனுப்பியது குறித்து அறிந்த போலீசார் ரேவதிக்கு பணம் அனுப்பிய மொபைல் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் அந்த மொபைல் எண்ணின் முகவரியை கண்டுபிடித்தனர்.

அந்த முகவரி சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 16வது தெருவை காட்டியுள்ளது காட்டியுள்ளது. அங்கு சென்ற போலீசார் ரேவதி குறித்து விசாரணை செய்த பொழுது அவர் ஆறு மாதங்கள் மட்டுமே அந்த வீட்டில் இருந்ததாகவும் பிறகு வாடகை பாக்கி தராத காரணத்தால் அவரை வீட்டைவிட்டு அனுப்பி விட்டதாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அக்கம்பக்கத்தினர் கூறிய முகவரியில் சென்று விசாரித்த பொழுது அவர் வியாசர்பாடி எம் கேபி நகர் பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிலும்  மூன்று மாதங்கள் 4 மாதங்கள் மட்டுமே இருந்த நிலையில் அடிக்கடி வீட்டை மாற்றிக் கொள்வார் வேறு வீட்டிற்கு வாடகைக்கு சென்று விடுவார் இப்படி தொடர்ந்து தனது வீட்டை மாற்றிக் கொண்டு இருந்ததால் அவரது நிலையான முகவரியை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பிறகு வியாசர்பாடி சர்மா நகர் பகுதியில் 13வது தெருவில் உள்ள ஒரு இளைஞரிடம் அவர் நெருக்கமாக பேசுவார் என அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கவே அந்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் சதீஷ் என்பதும், இவருக்கும் ரேவதிக்கும் அதிகப்படியான வாட்ஸ்அப் உரையாடல்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

பின்பு அந்த நபரை அழைத்துக் கொண்டு சென்று ரேவதி இருக்கும் இடத்தை காண்பிக்கும்படி போலீசார் கேட்டதை அடுத்து சதீஷ் என்கிற அந்த நபரும் ரேவதி இருக்கும் தற்போதைய முகவரியை காண்பித்துள்ளார். பாண்டிபஜார் போலீசார் ரேவதியை வீட்டில் வைத்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை ரேவதி கூறியுள்ளார். அதாவது ரேவதிக்கு திருமணம் ஆன நிலையில் அவரது கணவரை பிரிந்து வாழ்கிறார். இவரது அப்பா ஒரு ஆட்டோ ஓட்டுநர். வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் செல்லமாக வளர்த்த நிலையில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

திருமணம் ஆன நிலையில் ஆடம்பரமான வாழ்க்கை அமையாததால் தனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்த நிலையில் தன்னுடைய எட்டு வயது மகளுடன் தனியாக வாடகை எடுத்து வசித்து வந்துள்ளார். ரேவதி வியாசர்பாடி பகுதியில் சிறு வயது இளைஞர்கள் ஆன விக்னேஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவருடன் நெருக்கமான உறவில் இருந்து வந்துள்ளார்.

அவர்களுக்கு தேவையானவைகளை வாங்கி தருவதற்காகவும், அவர்களின் தேவைகளுக்காகவும், அவர்களுடன் ஜாலியாக சுற்றி திரிவதற்கும், தேவைக்கான பணத்திற்காக வேலைக்கு சென்றதாகவும் நகை கடையில் வேலை கிடைத்த நிலையில் நகைகளை பார்த்தவுடன் இதனை கொள்ளையடித்தால் வேலைக்கு செல்ல தேவையில்லை. இதனை வைத்து ஆடம்பரமாக வாழ்ந்து விடலாம் என்று நகைகளை கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியுள்ளார்.

இதற்காக, 2 நாட்கள் கடைக்கு சென்று, ஒரு நாள் விடுப்பு எடுத்து, அன்று கவரிங் நகை கடைகளுக்கு சென்று அதே நகைகளை வாங்கி வந்து மறுநாள் கடைக்கு செல்லும்பொழுது கடையில் உள்ள ஒரிஜினல் நகையை எடுத்துவிட்டு, அங்கு போலியான கவரிங் நகைகளை வைத்து முதலில் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும் என எண்ணி, கடைக்கு விடுமுறை எடுத்துக் கொண்ட நிலையில், அவர்கள் கண்டுபிடிக்கவில்லை என்பதால் மீண்டும் மீண்டும் அந்த செயலை செய்ததாகவும் ஒரு கட்டத்தில் அதிகப்படியான நகையை எடுத்து விட்ட நிலையில் இதற்குப் பிறகு கடைக்கு சென்றால் மாட்டிக்கொள்வோம் என்ற காரணத்தினால் கடையில் வேலைக்கு செல்லாமல் நின்றதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருடிய நகைகளை என்ன செய்தாய் என்ற போலீசாரின் கேள்விக்கு  ஒரு தாலி சரடு மற்றும் சில பொருட்களை தனியார் வங்கி ஒன்றில் அடமானத்திற்கு வைத்துள்ளார். மீதம் உள்ள நகைகளை தனது தேவைக்காக தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த நிலையில் அதனையும் காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர்

நகைக்கடையில் வேலை செய்வது போல் நடித்து நகை கடையில் இருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளை அடித்து வந்த ரேவதி மீது வழக்கு பதிவு செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர் சுப்பிரமணியன்...