மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது, டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.
ஆம் ஆத்மி இந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. டெல்லியில் பாஜக ஆட்சி அமையும் ஆனால் அது தேசத்திற்கான பின்னடைவு என கருத வேண்டி இருக்கிறது. டெல்லியில் நடைபெற்ற தேர்தல் நியாயமாக முறையில் நடைபெற்றதா என்ற ஐயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை காங்கிரஸ், ஆம் ஆத்மி ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கவில்லை. இந்தியா கூட்டணி தலைவர்கள் இதுகுறித்து தீவிரமாக கலந்தாய்வு செய்ய வேண்டும். இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஈகோ பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளி விட்டு நாட்டையும், மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல சட்டசபை தேர்தலிலும் இந்தியா கூட்டணி ஒருங்கிணைத்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. ஈரோட்டில் எதிர்பார்த்த வெற்றியை திமுக பெரும் என்று நம்புகிறேன்.
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான கேள்விக்கு, திருப்பரங்குன்றத்தில் உள்ள பொதுமக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர், வாழ விரும்புகின்றனர். பாஜக போன்ற சன்பரிவாத கும்பல்கள் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தமிழகத்தில் மத பதட்டங்களை உண்டு பண்ணா முயற்சிக்கிறார்கள். இப்படித்தான் வட மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக இந்துக்களை நிறுத்தி இரு சமூகத்திலும் பலியை கொடுத்து மதப் பிரச்சனையை ஏற்படுத்தினார்கள்.
இந்துச் சகோதரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடிப்படை பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காத பாஜக, கோவில், மசூதி போன்ற பிரச்சனைகளை தூண்டி மதப் பிரச்சினைகளை கிளப்பி அரசியல் ஆதாயம் தேடுவது போன்ற வழிமுறைகளை தான் கையாண்டு வருகிறார்கள். இந்து சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பாஜகவிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருப்பரங்குன்றம் தற்போது அமைதியாக உள்ளது மதவெறியர்களை அனுமதிக்க கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வேண்டுகோள் விடுகிறேன் என்று கூறினார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பாலியல் குற்றத்தை அரசு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பாலியல் குற்றங்கள் பெருகி வருகிறது என்பது புள்ளி விவரங்களில் தெரிகிறது. எப்படி தலித்துகளுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிராக குற்றங்கள் பெருகி வருகிறதோ அப்படித்தான் பாலியல் குற்றங்களும் பெருகி வருகிறது.
பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதை காவல்துறை தடுப்பதற்கு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது கர்ப்பிணி பெண்ணுக்கு எதிராக மற்றும் மாணவிக்கு எதிராக குற்றங்களை செய்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறையில் இதுக்கென்று தனி உளவு பிரிவை உருவாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறேன் என்று தெரிவித்தார்.