சென்னை மெரினா கடற்கரை 'லூப்' சாலையின் இரு புறமும் மீனவர்கள் மீன் வியாபாரத்தில் ஈடுபடுவதால், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத்தரப்பில், லுாப் சாலையில் உள்ள மீன் வியாரிபாரிகளுக்கு கட்டப்பட்ட மீன் கடை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டு விட்டது. மீன் வியாபாரிகளுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு, 356 கடைகளும் ஒதுக்கப்பட்டு விட்டது என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையை ஏற்ற நீதிபதிகள், மெரினா கடற்கரையில் உள்ள லுாப் சாலையில் இன்றும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இந்த சாலையில் இருபுறமும் மீன் கடைகள் அல்லாமல் மற்ற உணவு பொருட்களை விற்கும் நபர்கள் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
கடற்கரையில் இருந்து சாந்தோம் செல்ல இந்த சாலையில் தடையில்லாத போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, தாமாக முன்வந்து எடுத்த வழக்கை முடித்து வைத்தனர்.