போக்குவரத்து இளநிலை மற்றும் உதவி பொறியாளர் தேர்வு.. தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
போக்குவரத்து கழக இளநிலை மற்றும் உதவி பொறியாளர் தேர்வில் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசிலித்து உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இளநிலை மற்றும் உதவி பொறியாளர் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை மீண்டும் பரிசிலித்து எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க மாநகர போக்குவரத்து கழகத்துக்கும், தமிழக அரசுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இளநிலை பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று கடந்த 2014 ஆம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களை விசாரணைக்கு அழைத்தனர். இந்த விசாரணையின் போது தங்களை விட குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்ததாக கூறி, அந்தப் பணி நியமனங்களை செல்லாது என அறிவிக்க வேண்டுமென விண்ணப்பதாரர்கள் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில், விண்ணப்பதாரர்களின் உண்மையான மதிப்பெண்களின் அடிப்படையில் புதிய தேர்வு பட்டியலை தயாரித்து, ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்களுக்கு மாற்றாக தங்களுக்கு நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி விவேக் குமார் சிங் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த நியமன முறைகேடு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு, சென்னை எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் முறைகேடாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தால் மட்டுமே மனுதாரர்கள் நிவாரணம் கோர முடியும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலிக்க முடியாது என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என கூறிய நீதிபதி, பணி நியமனம் வழங்க கேட்கும் மனுதாரர்களின் கோரிக்கையை எட்டு வாரங்களுக்குள் மீண்டும் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, மாநகரப் போக்குவரத்து கழகத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டு, வழக்குகளை முடித்து வைத்தார்.
What's Your Reaction?