TNPSC தேர்வு.. கராத்தே போட்டியை சேர்க்க அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் - நீதிமன்றம் பதில்
தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் கராத்தே விளையாட்டையும் சேர்ப்பது குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் கராத்தே விளையாட்டையும் சேர்ப்பது குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசுப் பணிகளுக்கான தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. சிலம்பம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து, கபடி, மல்யுத்தம், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக், ஜூடோ, பளு தூக்குதல், தடகள விளையாட்டுக்கள், துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் மட்டும் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற முடியும்.
இந்நிலையில், விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் கராத்தே விளையாட்டையும் சேர்க்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஆவடியைஸ் சேர்ந்த கராத்தே சாம்பியன் அருண் பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கராத்தே விளையாட்டை விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்க கோரி அரசுக்கு பல மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூடோ போன்ற விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் கராத்தே உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கராத்தே விளையாட்டை சேர்ப்பது குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும் எனவும், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
What's Your Reaction?