தமிழ்நாடு

மீனவர்களுக்கான நிவாரண தொகை அதிகரிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டு  வரும் நிவாரணத் தொகையை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

மீனவர்களுக்கான நிவாரண தொகை அதிகரிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தும் வருகின்றனர். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரி மத்திய அரசிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல முறை கடிதம் எழுதியுள்ளார். ஆனால், மீனவர்களை விடுவிப்பதற்கான எந்த முயற்சியையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இலங்கை கடற்படையால் கடந்த வாரம் மட்டும் 42 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து  ராமேஸ்வரம், தங்கச்சி மடத்தில் மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,  சிறையில் வாடும் மீனவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர். தொடர்ந்து, கடந்த 2-ஆம் தேதி ராமேஸ்வரம் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இந்நிலையில், இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டு  வரும் நிவாரணத் தொகையை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ஆறு லட்சமாக ரூபாயாக இருந்த நிலையில் தற்போது எட்டு லட்சம் ரூபாயாக  உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும், இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவி தொகை 350 ரூபாய் என்பதை 500 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் உத்திரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமிழ்நாடு மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வெளியுறவுத்துறை அமைச்சரை தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழு நேரில் சந்தித்து வலியுறுத்திட தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக ராமேஸ்வரம் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, “நமது வறியநிலை மீனவர்களின் வாழ்வாதார கவலைகளுக்கு காரணமான மிகவும் உணர்திறனற்ற  1974 -ஆம் ஆண்டு  அநியாயமான ஒப்பந்தத்தால்  பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள். கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும், தமிழ்நாட்டிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன. 

அன்றிலிருந்து இன்று வரை நமது மீனவ சமூகம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகிறது. இலங்கை அரசால் அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள்  பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்தப் பிரச்சினையை அரசியலாக்குவதற்குப் பதிலாகவும், மத்திய அரசைக் குறை கூறுவதற்குப் பதிலாகவும்,  ஆக்கபூர்வமான அணுகுமுறையை மாநில அரசு  மேற்கொண்டால் அது பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு பெரிதும் உதவும்” என்று குறிப்பிட்டிருந்தார்.