டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட்ட 20 வயது இளைஞர்.. யார் இந்த மேத்யூ க்ரூக்ஸ்? என்ன காரணம்?
படிப்பில் சிறந்து விளங்கிய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் கணிதம் மற்றும் அறிவியலில் சிறந்த படிப்புக்காக விருதுகளையும், பரிசுகளையும் வென்றுள்ளார். இவரது பின்புலத்தை ஆராய்ந்து FBI அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்கியுள்ளார்.
இதற்காக டொனால்ட் டிரம்ப் நேற்று முன்தினம் பென்சில்வேனியாவில் பரப்புரையில் பங்கேற்றார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென டிரம்ப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரம்ப் உடனே சுதாரித்துக் கொண்டு விலகினார். ஆனால் துப்பாக்கி குண்டு அவரது காதில் லேசாக உரசிக் கொண்டு சென்றதால் காயம் அடைந்தார்
பாதுகாப்பு படையினர் உடனடியாக காதில் ரத்தம் வடிந்த டிரம்ப்பை கேடயம்போல் சூழ்ந்து அவரது உயிரை பாதுகாத்தனர். அதன்பிற்கு டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது நலமுடன் உள்ளார். அதே வேளையில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் பிரசாரத்தில் பங்கேற்ற ஒருவர் உயிரிழந்தார். டிரம்ப்பை துப்பாக்கியால் சுட்டவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதலுக்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்து இருந்தார். அமெரிக்காவில் வன்முறைக்கு ஒருபோதும் இடமில்லை என்று அவர் கூறியிருந்தார். இதேபோல் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி உள்பட பலரும் டிரம்ப் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அமெரிக்கா புலனாய்வு அமைப்பான FBI விசாரணை நடத்தி வருகிறது. அப்போது டிரம்ப்பை துப்பாக்கியால் சுட்டது 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்பது தெரியவந்தது. இவர் பென்சில்வேனியாவில் உள்ள பெத்தேல் பார்க் பகுதியை சேந்தவர். இவரது தந்தை குடியரசு கட்சியை சேர்ந்தவர் என தகவல் வெளியாகி உள்ளது.
தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் அடையாள அட்டை ஏதும் வைத்திருக்கவில்லை. இதனால் டிஎன்ஏ சோதனை முறையிலும், முக அடையாள சோதனை முறையிலும் FBI விசாரணை அதிகாரிகள் அவரை அடையாளம் கண்டுள்ளனர். ட்ரம்ப் மேடையில் பேசியபோது, எதிரே சுமார் 400 அடி தொலைவில் உள்ள கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்தபடி, ஏஆர்-15 ரக துப்பாக்கி மூலம் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் டிரம்பை சுட்டுள்ளார்.
அந்த துப்பாக்கியில் இருந்து இரண்டு ரவுண்டுகளில் 8 குண்டுகள் பாய்ந்த நிலையில், அதில் ஒரு குண்டு டிரம்பின் காதை உரசிச் சென்றுள்ளது. க்ரூக்ஸ் எதற்காக டொனால்ட் டிரம்பை சுட்டார் என்பது தெரியவில்லை. அவரது பின்புலத்தை ஆராய்ந்து FBI அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் 2022ம் ஆண்டு பென்சில்வேனியாவில் உள்ள அலெகெனியின் சமூகக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துள்ளார். படிப்பில் சிறந்து விளங்கிய இவர் கணிதம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கியற்காக விருதுகளையும், பரிசுகளையும் வென்றுள்ளார்.
மிகவும் அமைதியான மாணவராக திகழ்ந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் மீது கல்லூரி காலத்தில் எந்தவித ஒழுங்குமீறல் நடவடிக்கையும் இல்லை என தகவல்கள் கூறுகின்றன. தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் தனது வீட்டின் அருகே உள்ள நர்சிங் ஹோமில் வேலைபார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது.
What's Your Reaction?