தமிழ்நாடு

குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னை... அறிக்கையை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு..!

குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் திட்டம் வகுத்து, ஏப்ரல் 8 ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னை... அறிக்கையை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு..!
குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னை... அறிக்கையை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு..!

சென்னை பல்லாவரம், காமராஜர்நகர் 13-வது வார்டு, கண்டோன்மென்ட் 6-வது வார்டு ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த மூன்று பேர் பலியானதுடன், 30க்கும் மேற்பட்டோர் வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர். 

இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல்லாவரம் பகுதியில் வினியோகிக்கப்பட்ட குடிநீரை பரிசோதனை செய்ததில் அதில் கழிவுநீர் கலக்கவில்லை என கண்டறிந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, தீர்ப்பாயம், மூன்று பேர் இறந்து போனதற்கும், பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கும் காரணம் என்ன? என்பது குறித்து அந்த அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லையே எனக் கேள்வி எழுப்பியது.

மேலும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை வசதி மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போதுமானதாக இல்லை என்றும் குறிப்பிட்ட பகுதி வரை மட்டுமே பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதர பகுதிகளிலும் பாதாளச் சாக்கடை வசதி ஏற்படுத்தி, தீர்வு காண வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு உள்ளது எனவும் குறிப்பிட்ட தீர்ப்பாயம், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஒரு திட்டத்தை வகுத்து, தேவையான நிதி மற்றும் திட்டத்தை முடிக்கும் காலக்கெடு உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தது.