’தலைமைத் தொண்டன்’.. உங்களை காண காத்திருக்கிறேன்.. மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக பவள விழா-முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் விருது எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்பட உள்ளது.

Sep 17, 2024 - 07:43
 0
’தலைமைத் தொண்டன்’.. உங்களை காண காத்திருக்கிறேன்..  மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
MK Stalin

சென்னை: கடந்த 15ம் தேதி  பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இன்று தந்தை பெரியாரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. மேலும் திமுக தொடங்கப்பட்ட நாள் இன்றாகும். இத்துடன் திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இதை எல்லாம் சேர்த்து திமுக பவள விழா-முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது. 

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள பவள விழா-முப்பெரும் விழாவுக்கு  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.  இந்த விழாவில் தந்தை பெரியார் விருது பாப்பம்மாளுக்கும், பேரறிஞர் அண்ணா விருது அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கும் , கலைஞர் விருது ஜெகத்ரட்சகனுக்கும், பாவேந்தர் விருது கவிஞர் தமிழ்தாசனுக்கும், பேராசிரியர் விருது வி.பி.ராஜனுக்கும் வழங்கப்பட உள்ளது. மேலும் மு.க.ஸ்டாலின் விருது எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்பட உள்ளது. 

மேலும் கட்சியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த விழாவில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், திமுக பவள விழா-முப்பெரும் விழாவுக்கு திமுக தலைவருமான, முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ’எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “நான்தான் திராவிடன் என்று நவில்கையில் தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!” - எனப் பாவேந்தர் பாடிய உணர்ச்சி தமிழ்நிலமெங்கும் வீச, தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது!

தமிழுக்கு ஒரு இன்னலென்றால் தடுத்து நிறுத்தத் தம்பிமார் படை உள்ளதென்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள உடன்பிறப்புகளானோம் நாம்! ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்! இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்! தமிழினத் தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் பாடுபடும் அத்தனை பேருக்கும் இந்தத் தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்! இன்று மாலை பவள விழா - முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow