TVKVijay: தவெக விஜய்யால் திமுகவுக்கு வந்த தலை வலி... ஆட்சியில் பங்கு கேட்ட காங்கிரஸ்! போடு ரகிட ரகிட

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு, ஆட்சி, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என விஜய் கூறியிருந்தார். இதனை சுட்டிக்காட்டி திமுகவிடம், ஆட்சியில் பங்கு கேட்டுள்ளது காங்கிரஸ்.

Oct 28, 2024 - 22:15
 0
TVKVijay: தவெக விஜய்யால் திமுகவுக்கு வந்த தலை வலி... ஆட்சியில் பங்கு கேட்ட காங்கிரஸ்! போடு ரகிட ரகிட
விஜய்யால் திமுக கூட்டணியில் சலசலப்பு

சென்னை: சினிமாவில் இருந்து அரசியலில் களமிறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். அதே வேகத்தில் தவெக கொடியை அறிமுகப்படுத்திய விஜய், நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டார். விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று நடைபெற்ற தவெக மாநாட்டில், தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்நிலையில், தவெக மாநாட்டில் விஜய் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முக்கியமாக கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தருவதாக பேசியிருந்தார் விஜய். 
 
அதாவது, அரசியல் பயணத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை நம்பி வருபவர்களையும் நாம் அன்போடு வரவேற்க வேண்டும். அப்படி வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் சமமான அதிகாரப் பங்கு கொடுக்கப்படும் என்றார். சில தினங்களுக்கு முன்னர் விசிக தலைவர் திருமாவளவன் பேசிய பழைய வீடியோ வைரலானது. அதில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதே விசிகவின் நிலைப்பாடு என பேசியிருந்தார். திமுக கூட்டணியில் இருக்கும் போதே, ஆட்சி, அதிகாரம் குறித்து திருமாவளவன் பேசிய வீடியோ திடீரென ட்ரெண்டானது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அந்த வீடியோ நீக்கப்பட்டாலும் விசிகவின் நிலைப்பாடு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தான் என திருமாவளன் மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டில், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தருவதாக விஜய் பேசியதற்கு விசிக, காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விஜய்யின் அறிவிப்புக்கு உடனடியாக ரியாக் செய்திருந்தார். அதேபோல், காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர், “ஜாதிவாரி கணக்கெடுப்பு... கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருக்கிறது” என ட்வீட் போட்டிருந்தார். தவெக மாநாட்டில் விஜய் பேசியதை குறிப்பிடாமல், மாணிக் தாகூர் அவ்வாறு ட்வீட் போட்டிருந்தது திமுக கூட்டணி முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியிருந்தது. 

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரும் வழக்குரைஞருமான எம் சரவணன், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில், தமிழக முதல்வரும் இந்தியா கூட்டணி கட்சி தமிழக தலைவருமான முக ஸ்டாலினுக்கு வணக்கம். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நேற்று நடைபெற்ற தவெக மாநாட்டில், 2026ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்றால், தங்கள் கட்சி கூட்டணி ஆட்சிக்கு தயார் என பேசியுள்ளார். ஆகவே தாங்கள் தற்பொழுதே நமது கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க வேண்டும். 

தங்கள் கட்சி தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள். எனவே தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது. இதை தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். எனவே தமிழக மக்களின் என்னத்தை தாங்கள் நிறைவேற்றி தமிழகத்திற்கு தாங்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சரவணின் இந்த கோரிக்கை, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2026 தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி வைக்க, காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் இப்போதே ரெடியாகிவிட்டதாகவும் தெரிகிறது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow