Rain: இந்தப் பக்கம் நீலகிரி... அங்க டெல்லி... வெளுத்து வாங்கும் கனமழை... பள்ளிகளுக்கு விடுமுறை!
Heavy Rain in Tamil Nadu : நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா தாலுகா பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Heavy Rain in Tamil Nadu : ஜூலை மாதம் ஆரம்பம் முதலே தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பெரும்பாலான நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தாலும், அவ்வப்போது எதிர்பாராத நேரத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்துவந்த நிலையில், தற்போது வானம் மேகமூட்டத்துடன் மந்தமாக காணப்படுகிறது. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை மாட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தின் உதகை, குந்தா தாலுகா பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதலே நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கனமழையின் தாக்கம் அதிகம் இருப்பதால், சாலை போக்குவரத்து முதல் மக்களின் இயல்பு வாழ்க்கையே முடங்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை காரணமாக, ஜூன் 1ம் தேதி முதல் இப்போது வரை கூடுதலாக 64 சதவீதம் மழைப் பொழிவு கிடைத்துள்ளது. அதன்படி சராசரியாக 105.9 மில்லி மீட்டர் மழை பெய்திருக்க வேண்டியது; ஆனால், 173.3 மில்லி மீட்ட மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில், அதிகபட்சமாக நீலகிரியில் 794.2 மி.மீ, கோவையில் 558 மி.மீ மழை பெய்துள்ளது. குறைந்தபட்சம் என பார்த்தால், தூத்துக்குடியில் 7.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனிடையே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 56 ஆயிரம் கன அடியில் இருந்து 62,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, 10வது நாளாக பொதுமக்கள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம் தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. டெல்லி மட்டுமின்றி நொய்டா உட்பட அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை விடாமல் கொட்டித் தீர்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கனமழை காரணமாக டெல்லி நகரின் பல முக்கியமான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளானதோடு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. அதேபோல், சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் ஒட்டுமொத்த டெல்லியும் ஸ்தம்பித்துள்ளது.
மேலும் படிக்க - பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்
இன்னும் மழை விடாத நிலையில், தொடர்ந்து மிதமான மழைக்கு வாப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் டெல்லி அதன் சுற்றுபுற பகுதிகளுக்கு இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். இந்நிலையில் டெல்லி உட்பட வடஇந்தியாவில் இதுவரை பெய்துள்ள மழை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?