தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு அதிகாரிகள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தமிழகத்தில் காலியாக உள்ள 3.50லட்சம் காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும், முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும், அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும், தொகுப்பூதியம் மதிப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு அங்கன்வாடி கிராம உதவியாளர் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனால் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் மக்கள் பணிகள் எதுவும் நடைபெறாமல் அரசு அதிகாரிகள் தற்செயல் விடுப்பு எடுத்து இருப்பதால் பணிகள் எதுவும் நடைபெறாமல் அரசு அலுவலகங்கள் அனைத்தும் காலியாக கிடக்கின்றன.