Armstrong Wife : ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல்.. 'யாராக இருந்தாலும் விடாதீர்கள்'.. செல்வபெருந்தகை ஆவேசம்!
Selvaperunthagai on Armstrong Wife Death Threats : ''ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு, பாதுகாப்பாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார். நானும் முதல்வரை சந்திக்கும்போது அது குறித்து பேச இருக்கிறேன்'' என்று செல்வபெருந்தகை கூறியுள்ளார்.
Selvaperunthagai on Armstrong Wife Death Threats : பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு நின்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை மாநகரில் நடந்த இந்த கொலை தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரபல ரவுடி ஆற்காடு ரவுடி சுரேஷ்(Arcot Suresh) கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முதற்கட்டமாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய திருவேங்கடம் என்பவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதன்பிறகு அதிமுக பேச்சாளரும் மறைந்த பிரபல தாதாவுமான தோட்டம் சேகரின் மனைவியுமான வழக்கறிஞர் மலர்கொடி, திமுக இலக்கிய அணியின் துணை அமைப்பாளரான குமரேசனின் மகன் சதீஷ், மேலும் பிரபல பெண் ரவுடியும், முன்னாள் வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளருமான புளியந்தோப்பு அஞ்சலை என அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை(Armstrong Murder Case) வழக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பிறகு அவரது மனைவி பொற்கொடிக்கு(Porkodi Armstrong) பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இதற்கிடையே நேற்று ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு வந்த மர்ம கடிதத்தில், ஆம்ஸ்ட்ராங்கின் குழந்தையை கடத்தி கொலை செய்து விடுவதாகவும், குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மர்ம கடிதம் தொடர்பாக புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தனது நண்பர் கைது செய்யப்பட்டதை கண்டித்து மகாபலிபுரம் படூர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் இந்த மிரட்டல் கடிதம் எழுதியது தெரியவந்தது.
இது தொடர்பாக பள்ளி வேன் ஓட்டுநரான சதீஷை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஆக இருந்து வருகிறார். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு(Armstrong Wife) கொலை மிரட்டல் வந்துள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ''ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கொலை மிரட்டல் யார் விடுத்திருந்தாலும், சென்னை மாநகர் காவல்துறை அவர்களை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏற்கனவே அந்த குடும்பத்திற்கு, பாதுகாப்பாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார். நானும் முதல்வரை சந்திக்கும்போது அது குறித்து பேச இருக்கிறேன்.
புலன் விசாரணையில் தான் ஆர்ம்ஸ்ட்ராங்கை யார் கொலை செய்திருக்கிறார்கள் என தெரியும். நமது காவல்துறை ஸ்காட்லாந்துக்கு நிகரான காவல்துறை, எனவே கண்டிப்பாக உண்மையை வெளிக்கொண்டு வருவார்கள்'' என்று செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?