Vettaiyan Box Office: சூப்பர் ஸ்டாருக்கே இந்த நிலைமையா..? வேட்டையன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று வெளியான வேட்டையன் திரைப்படம், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Oct 11, 2024 - 16:17
 0
Vettaiyan Box Office: சூப்பர் ஸ்டாருக்கே இந்த நிலைமையா..? வேட்டையன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!
வேட்டையன் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்

சென்னை: தசெ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். ரஜினியுடன் பான் இந்தியா நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். லைகா தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வேட்டையன் படத்தில் ரஜினி என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் ஆபிஸராக நடித்துள்ளார். இதனால் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. 

வேட்டையன் ரிலீஸாகும் முன்னர் இந்தப் படத்துக்கு மிகப் பெரியளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்டன. முக்கியமாக வேட்டையன் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினி, மனசிலாயோ பாடலுக்கு டான்ஸ் ஆடி ரசிகர்களுக்கு வைப் கொடுத்திருந்தார். இந்நிலையில், நேற்று வெளியான வேட்டையன் படத்துக்கு, விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் மூலம் இயக்குநர் தசெ ஞானவேல் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். அதுவே வேட்டையன் படத்துக்கும் அதிக ஹைப் கொடுத்திருந்தது.

ஆனால், வேட்டையன் ரஜினியின் படமாகவும் இல்லாமல், தசெ ஞானவேல் படமாகவும் இல்லாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுத்துள்ளது. சமூக விரோதிகளுக்கு என்கவுன்டர் தான் சரியான தண்டனை என நினைக்கும் போலீஸ் ஆபிஸர் கேரக்டரில் ரஜினிகாந்த். ஆனால், அது தவறு என மனித உரிமை அமைப்பின் அதிகாரியான அமிதாப்பச்சன் ரஜினிக்கு புரிய வைக்கிறார். இதனிடையே துஷாரா விஜயன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட, அதுபற்றி விசாரணை நடத்தும் ரஜினிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருக்கிறது.

இறுதியாக தனது என்கவுன்டர் மனநிலையில் இருந்து ரஜினி எப்படி வெளியே வருகிறார் என்பது தான் வேட்டையனின் ஒன்லைன். கதையாக வேட்டையன் படம் பேசிய சமூக பிரச்சினை முக்கியமானது தான் என கருத்துத் தெரிவித்துள்ள ரசிகர்கள், திரைக்கதையும் மேக்கிங்கும் சுமார் ரகம் தான் என அதிருப்தியில் உள்ளனர். இதனால் வேட்டையன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் படக்குழுவுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. சூப்பர் ஸ்டார், லைகா, அனிருத் என பெரிய பேனரில் வெளியான வேட்டையன், முதல் நாளிலேயே வசூலில் தடுமாறியுள்ளது.

அதன்படி, வேட்டையன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல், 65 முதல் 68 கோடி ரூபாய் வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் 20 முதல் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ள வேட்டையன், இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 30 கோடி வரை கலெக்ஷன் செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. அதேபோல், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் 8 முதல் கோடியும், கேரளாவில் 4 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேட்டையனில் அமிதாப்பச்சன் நடித்திருந்தும், இந்தியில் 50 லட்சம் ரூபாய் மட்டுமே கலெக்ஷன் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

முதல் நாளே வசூலில் தடுமாறி வரும் வேட்டையன், இந்த வாரம் மட்டுமே ஓரளவு தாக்குப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வேட்டையன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் கங்குவா திரைப்படமும் நேற்று வெளியாகி இருந்தால், வேட்டையனின் வசூல் இன்னும் மோசமான நிலைக்குச் சென்றிருக்கும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஜெயிலர் படம் மூலம் கம்பேக் கொடுத்த ரஜினிக்கு, லால் சலாம், வேட்டையன் படங்கள் பேரிடியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow