ஓடும் ரயிலில் சாகசம்; மின் கம்பத்தில் மோதி தூக்கியெறியப்பட்ட மாணவன்
சென்னையில் ரயில் படியில் சாகசம் செய்த கல்லூரி மாணவன் மின் கம்பம் மோதி தூக்கி எறியப்படும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ்(16). இவர் சென்னை பாரிஸில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 9ம் தேதி மதியம் கல்லூரி முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் மின்சார ரயிலில் சென்றுள்ளார். அப்போது மதியம் சுமார் 12:20 மணியளவில் ராயபுரத்திற்கும் வண்ணாரப்பேட்டைக்கும் இடையே சென்று கொண்டிருக்கும் மின்சார ரயிலில் தொங்கியபடி சாகசம் செய்தபடி பயணித்துள்ளார். இதனை அவருடன் இருந்த நண்பர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தபடி வந்துள்ளார்.
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் மின் கம்பத்தில் அடிப்பட்டு ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டார் அபிலாஷ். இதனால் பதற்றமடைந்த அவரது நண்பர்கள் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி சம்பவ இடத்திற்கு வந்த பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் அபிலாஷ் சுய நினைவின்றி கிடந்துள்ளார். பின்னர், அவரை உடனடியாக மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றுள்ளனர். அங்கு அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்த்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அபிலாஷ் ரயிலில் ஏறி பயணம் செய்யும்போது சாகசத்தில் ஈடுபடுவதும் பின், மின் கம்பத்தில் மோதி தூக்கியெறியப்படும் வீடியோ காட்சியானது தற்பொழுது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ரயில் பயணங்களின்போது இதுபோன்ற சாகசங்களில் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் ஈடுபடுவதும் இதானால் பல உயிர்கள் பறிபோவதும் ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது. ஆபத்தை உணராமல் இதுபோன்ற சாகசங்களில் மாணவர்கள் ஈடுபடுவதால் பொதுமக்களும் இதில் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே காவல்துறையினர் இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற ரயில் சாகசங்களில் ஈடுபடும் மாணவர்களை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
What's Your Reaction?