"STARTUP CHENNAI - செய்க புதுமை"... புதிய அதிரடி திட்டங்களுடன் தமிழ்நாடு அரசு!

ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் தொடங்கும் பட்டியலின நபர்களின் உதவித்தொகையை ரூ. 50 கோடியாக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Nov 13, 2024 - 03:59
 0
"STARTUP CHENNAI - செய்க புதுமை"... புதிய அதிரடி திட்டங்களுடன் தமிழ்நாடு அரசு!
"STARTUP CHENNAI - செய்க புதுமை"... புதிய அதிரடி திட்டங்களுடன் தமிழ்நாடு அரசு!

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்ககம் சார்பில் "STARTUP CHENNAI - செய்க புதுமை" மற்றும் புதிய திட்டங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ. 12) தொடங்கி வைத்தார். மேலும் ஸ்டார்ட்டப் நிறுவனங்களை தொடங்குபவர்களுக்கு உதவும் வகையில் பெரியார் சமூக நீதி தொழில் வளர் மையத்தையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி, இன்னசண்ட் திவ்யா ஐ.ஏ.எஸ்உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

இதையடுத்து விழா மேடையில் பேசிய ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி, “நம் நாட்டில் அதிக அளவில் தொழிலதிபர்கள் உருவாக வேண்டும். இதற்கு நமது இளம் தலைமுறையினரை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். அதன்படி தமிழக அரசும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேசிய அளவில் Startup நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சனையை தீர்க்க வேண்டியது அவசியம். தமிழக அரசுடன் ஐ.ஐ.டி இணைந்து பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது.  காலநிலை மாற்றம், பசுமையான நடவடிக்கைகளை நோக்கி ஐ.ஐ.டி பல திட்டங்களை செயல்படுத்த இருக்கிறது. நமது தமிழக மாணவர்கள் பல Startup நிறுவனங்கள் நடத்தி வருவது பெருமையாக உள்ளது. ஒரு வருடத்திற்கு ஆயிரம் ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் உருவாக வேண்டும். ஐ.ஐ.டி தமிழ்நாடு அரசுடன் இணைந்து மேலும் பல முயற்சிகளை எடுக்கவும் தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பெண் தொழில்முனைவோர், மாணவர்கள் என ஸ்டார்ட்டப் நிறுவனத்திற்கு தமிழக அரசு பல உதவிகளை செய்து வருகிறது. புதுமையான பல நடவடிக்கையை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் உருவாக வேண்டும் என திட்டமிட்டு வருகிறோம். மேலும் பட்டியலின மக்கள் பயன்பெற ரூ. 50 கோடி வரை நிதியை உயர்த்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். மேலும் புது புது ஸ்டார்ட்டப் நிறுவனங்களை உருவாக்கினால் அதை சந்தைப்படுத்த தமிழக அரசு தயாராக இருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கால அவகாசம் நிறையவே இருக்கிறது. அதனால் எதிர்க்கட்சிகள் குறித்து தற்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. Co working space center ஸ்டார்ட்டப் நிறுவனங்களுக்கு உதவ கூடுதலாக கொண்டு வர திட்டம் இருக்கிறது. அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கும். மெட்ரோ ரயில் பணிகளும் முக்கியமானது. அதற்கான வேலைகள் சென்னையில் நடக்கிறது. அதே நேரத்தில் மழை நீர் பாதிப்பு இல்லாமல் இருக்கவும் கவனம் செலுத்தி வருகிறோம்” எனக் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow