சென்னை: ஆயுத பூஜை, தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்றும் (அக்.09) நாளையும் (அக்.10) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பண்டிகை காலங்களில் சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி, ஆயுத பூஜையுடன் தொடர் விடுமுறை இருப்பதால், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அறித்துள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், கும்பகோணம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமாரி, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு 09, 10ம் தேதிகளில் 1105 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதில் 9ம் தேதியான இன்று 225 பேருந்துகளும், நாளை (அக்.10) 880 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும், திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூருக்கு 09 மற்றும் 10 ஆகிய தேதிகளில், 300 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய ஊர்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒருர், பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு, புதன்கிழமையான இன்று 35 பேருத்துகளும் நாளை (அக்.10) 265 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல் பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மதுரையில் இருந்து இன்றும் நாளையும் 110 சிறப்பு பேருந்துகளும், ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூர் திரும்ப தேவையான அளவு சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிக்க 20,410 பயணிகளும், வெள்ளி அன்று பயணிக்க 3,743 பயணிகளும், சனிக்கிழமை 4,196 பயணிகளும், அக்டோபர் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 17,347 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள், www.tnstc.in அல்லது Mobile App மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சிறப்புப் பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.