Filmfare Awards 2024: பிலிம்பேரில் மாஸ் காட்டிய 'சித்தா' படம்.. 7 விருதுகளை தட்டித் தூக்கி அசத்தல்!

Filmfare Awards 2024 : பிலிம்பேர் விழாவில் கிட்டத்தட்ட அனைத்து பிரிவு விருதுகளையும் வென்ற 'சித்தா' திரைப்படம் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசியதும், இந்த படத்துக்கு தமிழக மக்கள் பெரும் வரவேற்பு அளித்ததும் குறிப்பிடத்தக்கது. 'சித்தா'வுக்கு அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன் 2'ம் பாகம் பல விருதுகளை தட்டிச் சென்றது.

Aug 4, 2024 - 13:33
Aug 5, 2024 - 15:32
 0
Filmfare Awards 2024: பிலிம்பேரில் மாஸ் காட்டிய 'சித்தா' படம்.. 7 விருதுகளை தட்டித் தூக்கி அசத்தல்!
Filmfare Awards 2024

Filmfare Awards 2024 : தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென் இந்திய திரைப்படத்துறை கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 'பிலிம்பேர் விருதுகள் சவுத்' வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 'பிலிம்பேர் விருதுகள் சவுத் 2024' (Filmfare Awards south 2024) விழா தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள JRC கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர், நடிகைகள் என பல்வேறு பிரிவுகளில் தனித்தனியாக விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தமிழ் திரையுலகை பொறுத்தவரை மொத்தம் 15 பிரிவுகளின் கீழ் 16 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விருதுகள் பெரும்பாலானவற்றை அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான 'சித்தா' படக்குழு தட்டித் துக்கியுள்ளது.

அதாவது சிறந்த படத்துக்கான பிலிம்பேர் விருதை 'சித்தா' வென்றுள்ளது. சிறந்த நடிகர் விருதை 'சித்தா' படத்துக்காக நடிகர் சித்தார்த்துக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகை விருதை 'சித்தா' படத்துக்காக  நிமிஷா சஜயனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் 'சித்தா' படத்தில் 'கண்கள் ஏதோ..' என்று தொடங்கும்  பாடலை பாடிய கார்த்திகா வைத்தியநாதன் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை பெற்றார். 

மேலும் சிறந்த இயக்குனருக்கான விருதை 'சித்தா' பட இயக்குனர் அருண்குமாரும், சிறந்த துணை நடிகைக்கான விருதை 'சித்தா' படத்தில் நடித்த அஞ்சலி நாயரும் வென்றுள்ளது, கடைசியாக சிறந்த இசை ஆல்பத்திற்கான விருது 'சித்தா'வுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் மற்றும் திபு நினன் தாமஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட அனைத்து பிரிவு விருதுகளையும் வென்ற 'சித்தா' திரைப்படம் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசியதும், இந்த படத்துக்கு தமிழக மக்கள் பெரும் வரவேற்பு அளித்ததும் குறிப்பிடத்தக்கது. 'சித்தா'வுக்கு அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன் 2'ம் பாகம் பல விருதுகளை தட்டிச் சென்றது.

முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகராக 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் நடித்த விக்ரமுக்கு வழங்கப்பட்டது. இந்த படத்தில் 'சின்னஞ்சிறு கிளியே..' என்ற பாடலை பாடிய ஹரிசரணுக்கு சிறந்த பின்னணி பாடகருக்கான விருதும்,  'பொன்னியின் செல்வன் 2'  படத்துக்காக சிறந்த புரொடக்‌ஷன் டிசைன் விருது கலை இயக்குனர் தோட்டா தரணிக்கும் வழங்கப்பட்டது. மேலும் 'பொன்னியின் செல்வன் 2' படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை ரவிவர்மனும், சிறந்த பாடலாசிரியர் விருது 'அகநக..' பாடலை எழுதிய இளங்கோ கிருஷ்ணனும் பெற்றுக் கொண்டனர்.

இதுதவிர விமர்சகர்கள் பார்வையில் சிறந்த திரைப்படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'விடுதலை: பகுதி 1' தேர்வு செய்யப்பட்டது. விமர்சகர்கள் பார்வையில் சிறந்த நடிகையாக 'ஃபர்ஹானா' படத்துக்காக ஐஸ்வர்யா ராஜேசும், 'தாதா' படத்துக்காக அபர்ணா தாஸும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் துணை வேடத்தில் சிறந்த நடிகருக்கான விருதை 'மாமன்னன்' படத்துக்காக பஹத் பாசில் பெற்றுக் கொண்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow