சென்னை: கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் என ரசிகர்களால் அழைக்கப்படும் ஷங்கர், தற்போது ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம், எதிர்பார்த்தளவில் வரவேற்பைப் பெறவில்லை. விக்ரம் படம் மூலம் கம்பேக் கொடுத்த கமல்ஹாசனை எந்த ரசிகர்கள் கொண்டாடினார்களோ, அவர்களே இந்தியன் 2-வில் கமலின் இந்தியன் தாத்தா கெட்டப்பை பங்கமாக ட்ரோல் செய்தனர். உலக நாயகன் கமல்ஹாசனை விட இயக்குநர் ஷங்கர் நெட்டிசன்களிடம் மாட்டிக்கொண்டு ரொம்பவே படாத பட்டார்.
இந்தியன் 2ம் பாகத்தின் தோல்வியால், இந்தியன் 3 நேரடியாக ஓடிடியில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. இதற்குமேல் ஷங்கரை நம்பி லைகா பணம் முதலீடு செய்ய ரெடியாக இல்லை எனத் தெரிகிறது. இந்தியன் 3 நிலைமை இனி என்னவென்று தெரியவில்லை என்றாலும், கேம் சேஞ்சர் படம் மீது ரொம்பவே நம்பிக்கை வைத்துள்ளார் ஷங்கர். டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தை, ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. ராம் சரணுடன் கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
ஆர்.ஆர்.ஆர் பட வெற்றிக்குப் பின்னர் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம் சரண் கலெக்டராக நடித்துள்ள இந்தப் படம் பொலிட்டிக்கல் ஜானரில் உருவாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படம் பொங்கல், சங்கராந்தி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி ரிலீஸாகிறது. இதனால் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிஸினஸ்-ஐ தொடங்கிய படக்குழு, முதலில் ஓடிடி ரைட்ஸ்-ஐ விற்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷங்கரின் இந்தியன் 2 பட ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் வாங்கியது.
ஆனால், கேம் சேஞ்சர் படத்தின் ஓடிடி ரைட்ஸை அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி இந்த ஓடிடி ரைட்ஸ் 160 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாம். அதேபோல், கேம் சேஞ்சர் படத்தின் இந்தி ரிலீஸ் உரிமை 50 கோடிக்கு விலை போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் ரிலீஸுக்கு முன்னரே கேம் சேஞ்சர் 210 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளது. ஆனாலும் இதுபற்றி படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.
அதேநேரம் இப்படத்தின் ஒரு பாடல் காட்சியை மட்டும் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஷூட் செய்துள்ளாராம் ஷங்கர். ஏற்கனவே கேம் சேஞ்சர் படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகிவிட்டன. தமன் இசையில் வெளியான இந்தப் பாடல்கள் ரசிகர்களிடம் பெரியளவில் ரீச் ஆகவில்லை. ஷங்கர் வழக்கம் போல அதே கலர்ஃபுல் பேக் ட்ராப், நூற்றுக்கணக்கான டான்ஸர்களை வைத்து உருவாக்கியுள்ள இப்பாடல்கள், 2கே கிட்ஸ்களிடம் எடுபடவில்லை. இப்படியான சூழலில் இன்னொரு பாடலையும் 20 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ள ஷங்கர், அதிலாவது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பாரா இல்லையா என்பதை காத்திருந்து பார்க்கலாம்.