2004ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது பூர்விகா மொபைல் நிறுவனம். மொபைல் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையில் முன்னணி வகிக்கும் இந்நிறுவனம் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கொடிகட்டிப் பறந்து வருகிறது. இந்த நிலையில், தான் பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் வீட்டில் இன்று (அக். 17) காலை முதலே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோடம்பாக்கம் பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் யுவராஜ் வீடு மற்றும் அவருக்கு சொந்தமாக உள்ள பள்ளிக்கரணை மற்றும் பல்லாவரத்தில் உள்ள இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகாரின் அடிபடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சோதனை, இன்று காலை 7 மணி முதலே நடைபெற்று வருகிறது.
தற்போது 3 இடங்களில் சுமார் 15 வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் முடிவில் வெளியாகும் தகவல்களைப் பொறுத்து பூர்விகா நிறுவனத்தின் மற்ற கிளைகளில் சோதனை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சோதனையின் முடிவில் எவ்வளவு வரி ஏய்ப்பு நடைபெற்றிருக்கிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து தற்போதுதான் ஓய்ந்தது. அது முடிவதற்குள் வருமான வரித்துறையினரின் சோதனை அணல் பறக்க நடைபெறுவது சென்னையை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.