சந்தானத்தின் 'டிடி ரிட்டர்ன்ஸ்' அடுத்த பாகம் - இன்று பூஜையுடன் தொடக்கம்

நடிகர் சந்தானம் நடிப்பில் தயாராகவுள்ள 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்கான பூஜை இன்று தொடங்கப்பட்டது.

Jul 8, 2024 - 02:49
Jul 8, 2024 - 17:44
 0
சந்தானத்தின் 'டிடி ரிட்டர்ன்ஸ்' அடுத்த பாகம் - இன்று பூஜையுடன் தொடக்கம்
Actor Santhanam's DD Returns 2 Poojai with Director Prem Anand

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கலக்கிய நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், சர்வர் சுந்தரம், தில்லுக்குதுட்டு, டிக்கிலோனா, டகால்டி, A1, பிஸ்கட் பாரிஸ் ஜெயராஜ், குலுகுலு, சபாபதி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார்.

இதில் ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருந்தது. சந்தானம், சுரபி முனிஷ்காந்த், மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மாறன், உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருந்த ‘டிடி ரிட்டன்ஸ்’ கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தில்லுக்கு துட்டு திரைப்படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகி இருந்தது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், தி ஷோ பீப்பிள், ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் அடுத்த பாகம் உருவாகவுள்ளது.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை நடிகர் ஆர்யா வழங்க, சந்தானம் நாயகனாக நடிக்கிறார். 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த், இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய படத்தையும் இயக்குகிறார். முக்கிய வேடங்களில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். படத்தின் தலைப்பு மற்றும் நடிகர் நடிகையர் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரேம் ஆனந்த், "கடந்த வருடம் ஜூலை மாதம் வெளியான 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்போடு பெரும் வெற்றி பெற்றது. அதன் அடுத்த பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து செய்து சமீபத்தில் முடித்துள்ளோம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரித்து, ரசித்து மகிழும் திரைப்படமாக இதுவும் இருக்கும்," என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "மிக அதிக பொருட்செலவில் உருவாக உள்ள இத்திரைப்படத்தின் கதை ஒரு சொகுசு கப்பலில் தொடங்கி தீவு ஒன்றில் நடைபெறும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக பிரம்மாண்ட பட்ஜெட்டில் அரங்கங்களை அமைக்க உள்ளோம். இப்படத்தை தயாரிப்பதற்காக நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், நடிகர் ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை விட அதிக குதூகலத்தையும் உற்சாகத்தையும் ரசிகர்களுக்கு இப்படம் வழங்கும்" என்று கூறினார்.

'டிடி ரிட்டர்ன்ஸ்' அடுத்த பாகத்தின் ஒளிப்பதிவை தீபக் குமார் பதி மேற்கொள்ள, ஆஃப்ரோ இசையமைக்கிறார். பரத் படத்தொகுப்புக்கும் ஏ.ஆர்.மோகன் கலை இயக்கத்திற்கும் பொறுப்பேற்றுள்ளனர். திரை உலகினர் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் பூஜை இன்று நடந்த நிலையில் படபிடிப்பு தொடர்ந்து நடைபெற உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow