'மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளீர்கள்'... ரஷ்யாவில் பிரதமர் மோடியை புகழ்ந்த புதின்!

''இந்தியாவில் நடந்த தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்று பதவியேற்ற உங்களுக்கு வாழ்த்துகள். உங்கள் தலைமையிலான அரசு நாட்டின் முன்னேற்றத்துக்காக கடினமாக உழைத்ததால் இந்த வெற்றி கிடைத்துள்ளது''

Jul 9, 2024 - 07:38
 0
'மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளீர்கள்'... ரஷ்யாவில் பிரதமர் மோடியை புகழ்ந்த புதின்!
புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு

மாஸ்கோ: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று ரஷ்யா புறப்பட்டு சென்றார். தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாஸ்கோ விமான நிலையத்தில் ரஷ்யாவின் துணை பிரதமர் டெனிஸ் மன்டுரோவ் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றார். பின்பு மோடிக்கு ரஷ்ய ராணுவம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அங்கு இருந்து நோவோ-ஓகாரியோவோவில் உள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இல்லத்துக்கு சென்றார்.

அப்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் மோடியை முகம் முழுவதும் புன்னகையுடன் கட்டித்தழுவி வரவேற்றார். அப்போது பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய புதின், ''இந்தியாவில் நடந்த தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்று பதவியேற்ற உங்களுக்கு வாழ்த்துகள். 

உங்கள் தலைமையிலான அரசு நாட்டின் முன்னேற்றத்துக்காக கடினமாக உழைத்ததால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. நீங்கள் இந்திய மக்களுக்காக உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளீர்கள் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். உங்களை மீண்டும் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று விளாடிமிர் புதின் பேசினார்.

அப்போது பிரதமர் மோடி, ''எனது நண்பரின் (புதின்) வீட்டுக்கு வந்துள்ளேன். எனது நாட்டு மக்கள் எனது கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்'' என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு புதின் சிறப்பு இரவு விருந்து அளித்தார். இந்தியா-ரஷ்யா இடையேயான 22வது உச்சி மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் சந்தித்து பேச உள்ளனர்.

அப்போது  இரண்டு தலைவர்களும் இந்தியா-ரஷ்யா இடையேயான வர்த்தக ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள், உள்நாட்டு பிரச்சனைகள் மற்றும் உலகலாவிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளனர். பிரதமர் மோடி 3வது முறையாக பதவியேற்றபின்பு மேற்கொள்ளும் 2வது வெளிநாட்டு பயணம் இதுவாகும். மேலும் உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கிய பிறகு, முதன்முறையாக மோடி ரஷ்யா சென்றுள்ளதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்தியா ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. எரிசக்தி துறையில் இந்தியாவுக்கு மிக முக்கிய ஆதாரமாக ரஷ்யா விளங்கி வருகிறது. ஆகவே பிரதமர் மோடி-அதிபர் புதின் சந்திப்பின்போது, முக்கியமான வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

பிரதமர் மோடி ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவுக்கு சென்று அந்நாட்டு பிரதமர், துணை பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இந்திய பிரதமர் ஒருவர் 41 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரியா செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow