தலைவர் இல்லாத நேரத்தில் இதெல்லாம் வேண்டாம்.. திமுக நிர்வாகியை தடுத்த ஆர்.எஸ்.பாரதி..

காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்த திமுக நிர்வாகியை கண்டித்த ஆர்.எஸ்.பாரதி, செய்திகளில் இடம் பிடிப்பதற்காக பேச வேண்டாம் என்று மேடையிலேயே கண்டித்ததால் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Sep 2, 2024 - 07:03
Sep 2, 2024 - 18:02
 0
தலைவர் இல்லாத நேரத்தில் இதெல்லாம் வேண்டாம்.. திமுக நிர்வாகியை தடுத்த ஆர்.எஸ்.பாரதி..
திமுக நிர்வாகிகளுக்கு ஆர்.எஸ்.பாரதி அறிவுரை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தச்சூர் கூட்டுச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது திமுக வர்த்தகர் அணியின் மாநில துணை செயலாளர் பாஸ்கர் சுந்தரம் பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரை விமர்சித்து பேசினார்.

அப்போது குறுக்கிட்ட ஆர்.எஸ்.பாரதி, பொதுக்கூட்டம் போல வேண்டாம் எனவும், நமது கட்சி பற்றி மட்டுமே பேச வேண்டும் எனவும், இதுதான் நாளை அனைத்து செய்திகளிலும் வரும் என்றார். செய்திகளில் இடம் பிடிக்க வேண்டும் என பேசக் கூடாது எனவும் கட்சி நிர்வாகியை ஆர்.எஸ்.பாரதி கண்டித்தார். தொடர்ந்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி, “தலைவர் இல்லாத நேரத்தில் நாம், இதிலெல்லாம் சிக்க கூடாது என்பதால் தான் தடுத்தேன் எனவும் அவரது கருத்திற்கு எதிர்ப்பு என்றோ, கண்டித்தேன் என்றோ தவறாக எடுத்து கொள்ள கூடாது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது மூத்த சகோதரர் ஸ்டாலின் என்று தெளிவாக கூறியுள்ளார்.

ஆகவே இந்த இரு சகோதரர்களின் முடிவே இந்தியா கூட்டணியின் முடிவு.  கட்சியினரை மதிக்க வேண்டும், தொண்டர்கள் கூறுவதை காது கொடுத்து கேளுங்கள் என மாவட்ட செயலாளர்களுக்கு அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் அறிவுறுத்தி உள்ளார்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “தமிழில் இருந்த கட்சி சட்ட புத்தகத்தினை கருணாநிதி ஆங்கிலத்தில் மாற்றிட உத்தரவிட்டார். தெலுங்கு தேச கட்சிக்கே சட்டதிட்ட விதிகள் உருவாக்கிய கட்சி திமுக. கிளைக்கழக பொறுப்புகளில் இருப்பவர்களை ஒன்றிய செயலாளர்களுக்கு தெரியவில்லை. 5.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் சட்டமன்ற தேர்தலில் இதே போல வெற்றி பெற்றிடலாம் என வெற்றி களிப்பில் இருந்திட கூடாது.

முயலும், ஆமையும் பந்தயத்திற்கு சென்றது போல ஆகி விட கூடாது. பாராளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு. அந்தந்த தேர்தலுக்கு வேறு விதமான வாக்குகள் நிர்ணயிக்கப்படும். தமிழ்நாட்டில் திமுகவிற்கு எதிராக விழுந்த 29% வாக்குகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரானது கிடையாது. அது அந்தந்த தொகுதியில் உள்ள நிர்வாகிகளுக்கு எதிரான வாக்குகள்.

20 மாத இடைவெளிக்குள் அந்த வாக்குகளை முழுமையாக பெற்றிட திமுகவினர் பணியாற்றிட வேண்டும். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு குறையாமல் வென்றிடும் வகையில் திமுகவினர் களப்பணியாற்றிட வேண்டும்” என்று தெரிவித்தார்.

அப்போது, மாவட்ட, ஒன்றிய அளவிலான கட்சி நிர்வாகிகள் கூட்டங்கள் முன்பெல்லாம் எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்து எடுத்துரைத்து தற்போது எவ்வாறு கூட்டங்களை நடத்திட வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு மேடையிலேயே அறிவுரை வழங்கினார்.

நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் தயவால் தான் திமுக 40 தொகுதிகளிலும் வென்று என்று செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூறிவந்தனர். அதே சமயம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட காங், தலைவர்கள் திமுகவால் தான் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் வென்றது என்று கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் இருந்து வருகிறது.

அதேபோல திமுக நிர்வாகிகளும் காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுத்து வந்தனர். இந்நிலையில், செல்வப்பெருந்தகை, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோரை விமர்சனம் செய்த, திமுக நிர்வாகியை மேடையிலேயே கண்டித்ததால் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow