சென்னையின் புரசைவாக்கம் மற்றும் அயனாவரம் பகுதியில் ஒரே இரவில் ஹார்டுவேர்ஸ் கடை, சலூன், ஷோரூம், ஸ்டீயோ என 5 மேற்பட்ட இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கல்பேஷ் குமார் ஜெயின். இவர் புரசைவாக்கம் ராஜா அண்ணாமலை புரம் தெருவில் முகேஷ் மார்கெட்டிங் என்ற பெயரில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வியபாரம் நடத்தி வருகின்றார். நேற்று இரவு வழக்கம் போல் கல்பேஷ் குமார் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கடையின் பூட்டை உடைத்து நம்பர் லாக்கர் உள்ள பணப் பெட்டியை திருடி சென்றுள்ளனர். இன்று காலை வழக்கம் போல கடையை திறக்க வந்த போது கடை பூட்டு உடைக்கப்பட்டு இருந்த தகவல் அறிந்து ஓடி வந்த கல்பேஷ் வேப்பேரி காவல்துறையினருக்கு புகார் அளித்தார். அதில் கல்லாபெட்டியில் வைத்து இருந்த 1 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் என வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல் கீழ்பாக்கம் மேடவாக்கம் டேங்க் ரோடு பகுதியில் சீப் அண்ட் பெஸ்ட் என்ற சலூன் கடையின் பூட்டை உடைத்து 50 ஆயிரம் ரூபாயை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து சலூன் கடை உரிமையாளர் ஹனி தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புரசைவாக்கம் பகுதியில் உள்ள போட்டோ ஸ்டீயோவின் பூட்டை உடைத்து 2 ஆயிரம் பணம், மேடவாக்கம் டேங்க் சாலையில் உள்ள விநாயகர் கோவிலின் உண்டியலை உடைத்து 40 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். அதே போல மேடவாக்கம் டேங்க் சாலையில் உள்ள சரவணா ஏஜென்சி என்ற கடையின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயன்றவர்கள் பூட்டை திறக்க முடியாமல் விட்டு சென்றுள்ளனர்.
சென்னையின் முக்கிய நகரங்களில் உள்ள பிரதான சாலைகளில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து, கொள்ளையர்கள் பணத்தை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் வியபாரிகள் இடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. புகார்களின் பேரிலும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் காவல்துறையினர் தீவிர விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.