புதுச்சேரி கல்வி நிறுவனத்திற்கு ரூ. 20 லட்சம் அபராதம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..
மருத்துவ கவுன்சில் விதிகளை மீறி, 26 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கிய புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்துக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் 2016-17 ம் கல்வியாண்டில், விதிகளுக்கு முரணாக 26 மாணவர்களை சேர்த்து உள்ளதாக கூறி, அந்த மாணவர்களை விடுவித்து, இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம், 2018ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், நீதிபதி தண்டபாணி முன் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 26 மாணவர்களும் படிப்பை முடித்து சிலர், மருத்துவ தொழில் புரிந்து வருவதாகவும், சிலர் மேற்படிப்பு படித்து வருவதாகவும் புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தற்போது அவர்களை தண்டித்தால், அவர்கள் படித்த கல்வி வீணாவது மட்டுமல்லாமல், சமுதாயத்துக்கு அதனால் எந்த பயனும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவ ஆணையம் தரப்பில், மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மருத்துவ கல்வி ஒழுங்குமுறை விதிகளின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு 26 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை செய்ய தடை விதிப்பது என முடிவு செய்துள்ளதாகவும், இது தவிர மருத்துவ கல்வி நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த மருத்துவ கல்வி நிறுவனம் தரப்பில், இரண்டு ஆண்டுகளுக்கு 13 இடங்கள் வீதம் அரசிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, படிப்பை முடித்த 26 மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது எனவும், அவர்களுக்கான படிப்பு நிறைவு பெற்றதற்கான சான்றிதழை வழங்க வேண்டும் என மருத்துவ ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.
மேலும், 2025-26 மற்றும் 2026-27ம் கல்வியாண்டுகளில் தலா 13 மருத்துவ இடங்களை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதி, தமிழ்நாடு ஸ்பாஸ்டிக் சொசைட்டிக்கு 10 லட்சம் ரூபாயும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள மகேஷ் நினைவு அறக்கட்டளைக்கு 10 லட்சம் ரூபாயும் இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் என புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.
What's Your Reaction?