தீபாவளி ஆம்னி பஸ் டிக்கெட் பல மடங்கு உயர்வு... கண்டுகொள்ளுமா தமிழக அரசு... பொதுமக்கள் புலம்பல்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை: வரும் 31ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். தங்களது சொந்த கார்களில் பயணிப்பவர்கள் தவிர்த்து, ரயில்கள், பேருந்துகள் மூலமாகவும் ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தீபாவளியை முன்னிட்டு ஒட்டுமொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனிடையே சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி, சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் புக் ஆகின.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பன்மடங்கு உயர்த்தி விற்பனை செய்யப்படுவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாட்களான அக்.28, 29, 30 ஆகிய மூன்று நாட்களிலும் ஆம்னி பேருந்து டிக்கெட் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல 800 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை இருந்த பேருந்து கட்டணம், 2000 முதல் 2500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதேபோல் சென்னையில் இருந்து தென்காசிக்கு செல்ல 800 முதல் 1200 ரூபாய் வரை இருந்த பேருந்து கட்டணம், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளில் பயணம் செய்வதற்கு 3,900 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், திருச்சி, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வதற்கான ஆம்னி பேருந்து கட்டணம் பன்மடங்கு உயர்ந்திருப்பது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை நாட்களில் இதுபோல் உயர்த்தப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வை, தமிழக போக்குவரத்துத் துறை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தீபாவளிக்கு இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டண உயர்வு பொதுமக்களுக்கு பெரும் தலை வலியாக உருவெடுத்துள்ளது.
தீபாவளி தினமான அக்.31 முதல் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை இருப்பதால், சொந்த ஊர் செல்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆம்னி பேருந்து கட்டண உயர்வை தடுக்கும் விதமாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு வரும் 28 முதல் 30ம் தேதி வரை, சென்னையில் இருந்து இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 4,900 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அரசுப் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டாலும், தனியார் ஆம்னி பேருந்துகளில் செல்லவும் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
முன்னதாக தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமானால், தேவைக்கேற்ப தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறியிருந்தார். மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் எனவும், அதிக கட்டண வசூலை தடுப்பதற்காக தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் 24ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனாலும் தற்போதைய நிலவரப்படி இதுவரை தனியார் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் முறைப்படுத்தவில்லை என்றே தெரிகிறது.
What's Your Reaction?