தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசிடம் வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்சம் ஆதார விலை நிர்ணய சட்டம் கேட்டு பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் பஞ்சாப் மாநிலம் ஹரியானா எல்லையில் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெகதீப்சிங் ஜெல்வாலா தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
நவம்பர் 26-ஆம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கி பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தலை வழங்கி உள்ளது. அதனை ஏற்று நேற்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜோசி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து நான் உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றோம். அப்போது பேச்சுவார்த்தைக்குச் சென்றபோது முன்னாள் சென்ற கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
அதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனக்கு மூக்கில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் வரும் 22-ஆம் தேதி மத்திய வேளாண்துறை அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உத்தரவாதத்தோடு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு சென்றுள்ளனர்.
எனது உடல்நிலை பொறுத்து நானும் அந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பேன். விபத்து குறித்து மத்திய அமைச்சர் வருத்தம் தெரிவித்து இருந்தார். மத்திய அரசு வேளாண் உற்பத்தி பொருட்களுக்கான குறைந்தபட்ச நிர்ணய விலை சட்டத்தைக் கொண்டு வர ஆதரவு தெரிவிக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள தலைவர்கள் கூறியுள்ளனர்.
அரிட்டாபட்டி மக்கள் போராட்டத்தை உணர்ந்து டங்ஸ்டன் ஏலத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இதேபோன்று காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களிலும் பல திட்டங்கள் சொல்லப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிறகு கைவிடப்படுகிறது. காவேரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலாமக அறிவிக்கப்பட்டது போல் அரிட்டாபட்டி பகுதியையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மடலமாக அறிவிக்கப்பட்டால் தான் பாதுகாக்கப்படும். இது தெரிந்தும் முதல்வர் ஏன் காலதாமதப்படுத்துகிறார் என தெரியவில்லை.
விவசாயிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை அவ்வபோது எடுத்து வருகின்றனர். விமான நிலையம் கட்டியே தீர்வோம் என கூறுகின்றனர். தமிழ்நாடு அரசு இந்த இடத்தை தேர்வு செய்துள்ளதாகவும் அதற்கான முன் அனுமதி கொடுத்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த பகுதியில் விவசாயிகள் உயிர் இருக்கும் வரை பரந்தூர் விமான நிலையம் அமைக்க முடியாது.
உயிரைக் கொடுத்து நிலத்தை மீட்க அவர்கள் தயாராக உள்ளனர். ஆனால் அரசு மக்கள் உயிரை மதிக்க தவறுகின்றனர். அதற்கான பாடத்தை அவர்கள் அனுபவிக்க போகிறார்கள். அரசு நெல் கொள்முதல் செய்வதில் ஊழல் நடக்கிறது. மூட்டைகள் கணக்கை தவறாக காண்பித்து விவசாயிகளுக்கு அநீதியை இழைக்கின்றனர். இந்த புகாரை தீர்க்க வேண்டுமானால் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் விவசாயிகள் இணைந்து ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும்.
இதில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் கார்ப்பரேட்டுக்கு வழங்க வேண்டும். நிலங்களை கார்பரேட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என நில வங்கி தொடங்கியுள்ளனர். சட்டவிரோதமாக இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கொண்டு வராத ஒரு திட்டத்தை தமிழ்நாடு கொண்டு வந்துள்ளது.
எனவே விவசாய நிலங்களை விட்டு விவசாயிகள் வெளியேற வேண்டும் என முதல்வர் நினைக்கிறாரோ என விவசாயிகளுக்கு தோன்றுகிறது. எனவேதான் கொள்முதல் செய்வதில் ஏற்படும் குளறுபடிகளை அவர்கள் தீர்ப்பதில்லை. விவசாயிகள் தானாக நிலங்களை விட்டு வெளியேறி விட வேண்டும். கார்ப்பரேட்டுகள் தொழிற்சாலை தொடங்குவதற்கு தமிழ்நாடு அரசு நில வங்கி தொடங்கியுள்ளது.
நீங்கள் எல்லாம் வாருங்கள். உங்களுக்கு வேண்டப்பட்ட இடங்களில் நீங்களே நிலங்களை தேர்வு செய்யுங்கள். எந்தத் தொழில் வேண்டுமானாலும் தடையின்றி செய்யலாம். நீர்நிலைகள் எதிர்பாக இருக்குமானால் நீர்நிலைகள் எல்லாம் நீங்கள் அபகரித்துக் கொள்ளலாம் என்கிற சட்டத்தை நிறைவேற்றி இருக்கிற அரசிடம் நாம் எந்த கோரிக்கையை வைத்து போராடுவது. எந்த நியாயத்தை பெறப்போகிறோம் என்று அச்சம் ஏற்படுகிறது.
இதனால் விவசாயிகளுக்கு கொள்முதல் சட்டத்தை மத்திய அரசு கொடுத்தால் எங்களால் கார்ப்பரேட்டுகளை எதிர் கொண்டு விளைவிக்க கூடிய பொருட்களை விற்பனை செய்ய முடியும். இதற்காக தான் நாங்கள் நிரந்தர சட்டம் கேட்டு போராடிக் கொண்டிருக்கிறோம். ஆட்சிக்கு வருகிற தலைவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்தாண்டு காலம் முதல்வர் ஸ்டாலின் எங்களுடன் நின்று போராடினார். இன்று நிலங்களை பறிக்கிறார்.
நிலங்களை தர மறுக்கும் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. மேலும் புதிய வரவுகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர். எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவர் செயல்பாடுகள் இருந்தால் மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள் இல்லையென்றால் இந்த பிரச்சனையை தீர்க்க யார் என்ற நிலை ஏற்படும் இவ்வாறு கூறினார்.