தொடரும் கொரியர் நிறுவன மோசடிகள்.. சைபர் குற்றவாளிகள் அட்டூழியம்..
Fedex Courier Fraud Case : ஃபெடெக்ஸ் [FEDEX] கொரியரில் இருந்து பேசுவதாக கூறி மூன்று லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணத்தை ஏமாற்றிய சைபர் குற்றவாளிகளை போலீசார் கேரளாவில் வைத்து கைது செய்துள்ளனர்.
Fedex Courier Fraud Case : சென்னையை சேர்ந்த இந்து என்கிற பெண் கடந்த ஏப்ரல் மாதம் கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து இருந்தார். அந்த புகாரில், அடையாளம் தெரியாத நபர்கள் ஃபெடெக்ஸ் கொரியரில் இருந்து பேசுவதாக கூறி தங்களுடைய ஆதார் கார்டை பயன்படுத்தி ஒரு பார்சல் வந்துள்ளதாகவும், அதில் சட்டத்திற்கு புறம்பான போதைப் பொருட்கள் இருப்பதாகவும் கூறி மிரட்டி உள்ளனர்.
மேலும், இது தொடர்பாக சைபர் கிரைம் அதிகாரி ஒருவர் ஸ்கைப் கால் மூலமாக தொடர்பு கொண்டு உள்ளார். அதில் போதைப்பொருள் உள்ளதாக கூறி உங்களை இன்னும் சில மணி நேரத்தில் கைது செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார்
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இந்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளார். உடனடியாக போலியான சைபர் கிரைம் அதிகாரிகள் தங்களுடைய வங்கி கணக்கில் உள்ள பணத்தை செலுத்துமாறு கூறியுள்ளனர். அதன்படி வங்கியில் உள்ள மூன்று லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணத்தை இந்து சைபர் குற்றவாளிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தி உள்ளார்
இதனை அடுத்து அந்த தொலைபேசி எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. சந்தேகம் அடைந்த இந்து கிழக்கு மண்டல காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் குற்றவாளிகள் கேரளாவில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்
இதனை அடுத்து தனிப்படை போலீசார் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த நித்தின் ஜோசப் (31) மற்றும் ரமேஷ் (32) ஆகிய இரண்டு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.
இதேபோல கடந்த மே மாதம் 20ஆம் தேதி, சென்னை வடபழனி குமரன் காலனியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் என்பவருக்கும் இதே போன்று தொலைபேசி அழைப்பு மூலம், மும்பையில் இருந்து fedex கூரியரில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது பெயரில் மும்பையில் இருந்து தைவானுக்கு அனுப்பிய கூரியரை மும்பை சுங்கத் துறையினர் கைப்பற்றி உள்ளதாகவும், அதில் போதைப் பொருட்கள் பாஸ்போர்ட் மற்றும் கிரெடிட் கார்டு, மற்றும் துணிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக மும்பை காவல்துறையினர் தங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று கூறி ஸ்ரீராமை பயமுறுத்தி உள்ளார்.
இதனால், பயந்து போன ஸ்ரீராம் வங்கி விவரங்களை தெரிவித்துள்ளார். மோசடி நபரின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பும் படி மிரட்டி உள்ளார். இதையடுத்து ரூ.1,41,800 அனுப்பி உள்ளார். இதனையடுத்து, மோசடியில் தொடர்புடைய வேப்பேரியைச் சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் நந்தினி இருவரையும் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?