நித்தம் நித்தம் நெல்லு சோறு.. நெய் மணக்கும் கத்திரிக்கா.. நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதய்யா என்ற பாடலை கேட்டு ரசிக்காதவர்கள் யாரும் இருந்து இருக்க மாட்டார்கள். ஆனால், அதே மீன் குழம்பில் விஷம் கலந்து கணவனை கொலை செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் பெண் ஒருவர்.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த கட்டியங்குப்பம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த 50 வயதான கோபாலகண்ணனுக்கும், விஜயாவுக்கும் திருமணமாகி 27 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில், கோபாலகண்ணன் கோயம்புத்துாரில் உள்ள கல்லுாரி ஒன்றில் தங்கி சமையல் வேலை செய்து வந்துள்ளார். கடலூரில் தனியே வசித்து வந்த விஜயாவிற்கும், எதிர் வீட்டில் வசித்து வந்த 57 வயதான தேவநாதன் என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து கோபாலகண்ணனின் தந்தை ராதாகிருஷ்ணன், மகனிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் கோபாலகண்ணன் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து விஜயாவை கண்காணித்து வந்துள்ளார்.
அண்மையில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து, வாயில் நுரை தள்ளிய நிலையில் கோபாலகண்ணன் வீட்டில் கிடந்துள்ளார். உடனே, அவரை மீட்ட உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் இறந்துவிட்டதாகக் கூற, உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நன்றாக இருந்த மனிதர் திடீரென வாயில் நுரை தள்ளி இறந்தது எப்படி என்ற குழப்பத்தில் இருந்த உறவினர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த குள்ளஞ்சாவடி இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சம்பவம் குறித்து விஜயாவிடம் விசாரணை நடத்தினார்.
அப்போதுதான், கோபாலகண்ணனின் மரணம் கொலை என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. விஜயாவிற்கும், தேவநாதனுக்கும் இடையேயான காதலுக்கு, கோபால கண்ணன் தடையாக இருந்ததால், கள்ளக் காதல் ஜோடி, அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளது. தனது கணவருக்கு மிகவும் பிடித்த மீன் குழம்பில் பூச்சி மருந்தை கலந்து ஆசை ஆசையாய் கொடுத்துள்ளார் விஜயா.
மூத்த காதல் ஜோடியின் திட்டத்தை அறியாமல், விஷம் கலந்த மீன் குழம்பை ருசித்து ருசித்து சாப்பிட்ட கோபால கண்ணன், உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து விஜயா மற்றும் தேவநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.