Parithabangal: “சும்மா காமெடி பண்ணோம்..” லட்டு வீடியோ சர்ச்சை... வருத்தம் தெரிவித்த பரிதாபங்கள் டீம்

திருப்பதி லட்டு வீடியோ சர்ச்சையான நிலையில், அதற்கு பரிதாபங்கள் யூடியூபர் டீம் வருத்தம் தெரிவித்துள்ளது.

Sep 25, 2024 - 16:19
Sep 25, 2024 - 16:27
 0
Parithabangal: “சும்மா காமெடி பண்ணோம்..” லட்டு வீடியோ சர்ச்சை... வருத்தம் தெரிவித்த பரிதாபங்கள் டீம்
வருத்தம் தெரிவித்த பரிதாபங்கள் டீம்

சென்னை: திருப்பதி கோயிலில் விநியோகிக்கப்படும் லட்டுகளில், விலங்குகளின் கொழுப்பு இருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார். அதாவது லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில், விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இதனையடுத்து திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் ஆய்வு செய்யப்பட்டது. அதில் விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை இருப்பது தெரியவந்தது. இதனால் திருப்பதி லட்டு விவகாரம் ஆந்திர அரசியலில் மட்டுமில்லாமல், பக்தர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேநேரம் சந்திரபாபு நாயுடுவின் இந்த குற்றச்சாட்டை, ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மறுத்திருந்தார். பல்வேறு பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் சந்திரபாபு நாயுடு இப்படி குற்றம்சாட்டுவதாக கூறியிருந்தார். இன்னொரு பக்கம் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணும் திருப்பதி லட்டு விவகாரத்தில் ரொம்பவே ஆக்ரோஷமாக கருத்துகளை தெரிவித்து வருகிறார். முக்கியமாக திருப்பதி லட்டு குறித்து நடிகர் கார்த்தி பேசியதற்கு, பவன் கல்யாண் கொடுத்த ரியாக்ஷன் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே பரிதாபங்கள் யூடியூப் தளத்தில் வெளியான ‘லட்டு பரிதாபங்கள்’ என்ற வீடியோ, இன்னொரு சர்ச்சையாக விஸ்வரூபம் எடுத்தது. பரிதாபங்கள் என்ற யூடியூப் சேனல் நடத்தி வரும் கோபி, சுதாகர், தனது குழுவினருடன் இணைந்து பல வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்தந்த நேரங்களில் ட்ரெண்டிங்கில் அல்லது பரபரப்பாக உள்ள பிரச்சினைகளை கலாய்த்து காமெடி வீடியோவாக வெளியிடுவது இவர்களது வழக்கம். அப்படி திருப்பதி லட்டு விவகாரத்தை வீடியோவாக வெளியிட்டு பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தனர். 

திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்ட சம்பவம் முதல், சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு, நடிகர் கார்த்தியின் சர்ச்சையான கருத்து, பவன் கல்யாணின் ரியாக்ஷன் என அனைத்தையும் பயங்கரமாக பங்கம் செய்தனர். லட்டு பரிதாபங்கள் வீடியோ வெளியானது முதலே சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. லட்டு சர்ச்சையில் சம்பந்தப்பட்ட யாரையும் விட்டு வைக்காமல், எல்லோரையும் வச்சு செய்திருந்தது பரிதாபங்கள் டீம். இந்நிலையில், இந்த லட்டு பரிதாபங்கள் வீடியோ திடீரென டெலிட் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு தான் லட்டு பரிதாபங்கள் வீடியோ இன்னும் வேகமாக வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ‘லட்டு பரிதாபங்கள்’ வீடியோ வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளது பரிதாபங்கள் டீம். அதில், கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை அதையும் மீறி சிலர் மணம் புண்பட்டிருப்பதால், அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கி உள்ளோம்.. இதுபோல் வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்” என ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow