பிரபல நிறுவனத்தில் ரேடியோ ஜாக்கியாக இருந்து, சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானவர் செந்தில். இவரை மிர்ச்சி செந்தில் என்று சொன்னால் எல்லோரும் நன்கு அறிவர். தவமாய் தவமிருந்து, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் நடித்துள்ள செந்தில், மதுர, சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், அண்ணா உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், தனது நண்பரின் வாட்ஸ் அப் எண்ணில் இருந்து வந்த மெசேஜை நம்பி 15 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்துவிட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு குமுறலை மிர்ச்சி செந்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் வாட்ஸாப் எண்ணில் இருந்து மிர்ச்சி செந்திலின் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அவர் தமக்கு தெரிந்த நண்பர் என்பதால் செந்திலும் தொடர்ந்து பேசியுள்ளார். அப்போது தனக்கு அவசமராக 15 ஆயிரம் ரூபாய் வேண்டும் என, செந்திலிடம் அந்த தொழிலதிபர் கேட்டுள்ளார். மேலும் ஜி பே எண்ணை அனுப்பி அதற்கு பணத்தை அனுப்பிவைக்கும் படியும் கூறியுள்ளார்.
இதனைப் பார்த்த செந்தில், எப்போதும் பணம் கேட்காதவர் இப்போது கேட்கிறாரே, ஏதோ அவசர நிலையாக இருக்கும் என்று எண்ணி, உடனடியாக 15,000 ரூபாய் பணத்தை டிரான்ஃபர் செய்துள்ளார். பிறகு திடீரென வேறு ஒரு நம்பரை எதற்காக தன் நண்பர் கொடுக்க வேண்டும் என்று யோசித்த செந்தில், தனது நண்பருக்கு கால் செய்துள்ளார். அப்போது தனது ஃபோன் ஹேக் செய்யப்பட்டு அதுதொடர்பாக சைபர் கிரைமில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று நண்பர் கூறிய பதிலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செந்தில் தற்போது அழுவதா, சிரிப்பதா என தெரியவில்லை என வீடியோ வெளியிட்டுள்ளார்.
தன்னை போல் யாரும் பணத்தை இழந்துவிடக் கூடாது என்பதற்காக வீடியோ வெளியிட்டதாக கூறியுள்ள மிர்ச்சி செந்தில், இது சுட்ட கதையல்ல... சொந்தமாக பட்ட கதை என்றும் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். ஒருபுறம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி., லிங் அனுப்பி வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை அபேஸ் செய்வது, தற்போது வேற்றொருவரின் வாட்ஸாப்பை ஹேக் செய்து அதன் மூலம் பணம் பறிப்பது என நாளுக்கு நாள் டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.