கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை நடைபெற்றது. அக்கூட்டத் தொடரில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சுகள் நேரலை ஒளிபரப்பில் புறக்கணிக்கப்படுவதாகவும் இந்த விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாக அதிமுக அறிவித்து, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வழங்கியது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. அப்போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக சபாநாயகர் மீது அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேச முயன்றார். ஆனால் அதற்கு சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்தார்.
அதன்பின்னர் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி பேச முயன்றபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவே அதிமுகவினர் கூட்டாக வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து, சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அளித்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம், இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்தார்.
அதன்படி, இன்று நடக்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிகிறது. வாக்கெடுப்பு நடக்கும்போது சபாநாயகர் அப்பாவு அவரது இருக்கையில் இருக்கமாட்டார் என்றும் அந்தநேரத்தில் துணை சபாநாயகர் அல்லது மாற்று தலைவர்கள் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.
இதனையடுத்து சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அளித்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம், திங்கள் கிழமை (மார்ச் 17) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என சட்டசபை செயலாளர் சீனிவாசன் அறிவித்தார்.
இது தொடர்பாக கூறிய சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் பேசுவது டிவியில் காட்டப்படவில்லை என்பது அதிமுக புகாராக உள்ளது. இதற்காக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இது பற்றி நாங்கள் பதிலும் அளித்துவிட்டோம். அரசு தரப்புக்கு எந்த குறுகிய எண்ணமும் இல்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டோம். கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் தொழில்நுட்ப சிக்கலால் ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்டது. இம்முறை அப்படி ஏற்படாது. அதிமுகவின் நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதம் நடைபெறும் என்று கூறினார்.