Hindu Leader Ramalingam Murder Case : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பா.ம.க முன்னாள் நகர செயலாளரான இவர் இந்து முன்னணி பிரமுகராகவும் இருந்து வந்தார். மேலும் அப்பகுதியில் பாத்திரக் கடை நடத்தி வந்தார். இதற்கிடையே கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி ராமலிங்கம் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
ராமலிங்கம் அந்த பகுதியில் மதமாற்றத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும், இதன் காரணமாக அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த படுகொலை வழக்கை தஞ்சாவூர் மாவட்டம் திருவுடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ராமலிங்கம் படுகொலை வழக்கில் முதற்கட்டமாக முகம்மது ரியாஸ், நிஜாம் அலி, சர்புதின், முகமது ரிஷ்வான், அசாருதின் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். பின்னர் இந்த வழக்கு என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கில் தீவிர விசாரணை நடத்திய என்ஐஏ அமைப்பு, மேலும் 8 பேரை அதிரடியாக கைது செய்தது.
இந்த வழக்கில் தொடர்ந்து தலைமைறைவாக இருந்து வரும் 5 நபர்களை தேடப்படும் குற்றவாளியாக என்.ஐ.ஏ அறிவித்தது. இந்நிலையில், ராமலிங்கம் படுகொலை தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தமிழ்நாட்டின் 25 இடங்களில் இன்று அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக கும்பகோணம், திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ராமலிங்கம் படுகொலை வழக்கில் தொடர்புடைய சொந்தமான இடங்களில் அதிகாலை 6 மணி முதலே என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மிக முக்கியமாக திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கம்பூர் பகுதியைச் சேர்ந்த நவாசுதீன் ( 34) என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
ஆட்டோ டிரைவராக இருந்து வரும் நவாசுதீன், தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவில் உறுப்பினராக இருந்துள்ளார். தற்போது இவர் எஸ்டிபி ஐ கட்சியில் உறுப்பினராக உள்ளார். இதேபோல் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் ராஜ் முகம்மது (40) என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
கும்பகோணத்தில் 6 பேரின் வீடுகளிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 வீடுகளிலும், காரைக்காலில் ஒரு வீடுகளிலும் சோதனை நடந்தது. அதிகாலை முதல் பல மணி நேரம் நடந்த சோதனையில் செல்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த செல்போன்களையும், லேப்டாப்களையும் ஆராய்ந்து வரும் போலீசார், அதில் ராமலிங்கம் படுகொலை தொடர்பாக ஏதும் உரையாடல் இடம்பெற்றுள்ளதா? வீடியோ காட்சிகள் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.