Minister KN Nehru About Rainwater Drainage Works in Chennai : நாட்டில் தற்போது பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) வடகிழக்கு பருவமழை தீவிரமடையவுள்ளது. இதனையொட்டி வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று (ஆகஸ்ட் 16) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மழைநீர் வடிகால் பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் அமைச்சர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதையடுத்து இக்கூட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், வடகிழக்கு பருவமழையின்போது இருக்க வேண்டிய தயார் நிலைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மெட்ரோ பணிகளும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருவதால், மழையின்போது மக்கள் பாதிப்பில்லாமல் இருப்பது, மின் தடை,பேரிடர் கால உபகரணங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “சென்னையில் தற்போது வரை 3,040 கிலோமீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 61 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகளும், தூர்வாரும் பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. தொடர்ந்து, கூவம் பகுதிகளை தூர்வார வேண்டுமென அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதுமட்டுமின்றி 320 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், அடுத்த 15 நாட்களுக்குள் எவ்வளவு பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்பது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தூர்வாரும் பணிகள் 30 நாட்களுக்குள் முடிந்த வரை நிறைவு செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: சிப்காட் தொழிலாளர்களுக்காக தங்கும் விடுதி
சென்னையில் மழை பெய்தாலே சாலைகளில் மழை நீர் தேங்குவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் உட்பட அனைவருமே கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு பெய்த கனமழையில் சிக்கி சின்னாப்பின்னமான சென்னையை யாராலும் மறக்க முடியாது. சென்னையின் முக்கியப் பகுதிகளிலும் கூட மழை நீர் தேங்கி, மின்வெட்டு ஏற்பட்டு, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகினர். எனவே கடந்தாண்டைப் போலவே இந்த பருவமழையிலும் பாதிப்புகள் ஏற்பட்டுவிடக் கூடாது என தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.