கரையை கடந்தாலும் விடாத வானம்.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல். மகாபலிபுரம் - புதுச்சேரி அருகே கரையை கடந்துள்ளது. இதனையடுத்து புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் 70-80 கி.மீ வேகத்தில் பலத்த சூறை காற்று வீசி வருகிறது.
ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் பலத்த வேகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியதால், ஒரே நாளில் சென்னையின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக மாறின. இதனால் பேருந்து, ரயில், விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை மற்றும் மயிலாடுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?