சென்னை திநகர் தணிகாச்சலம் சாலையில் சாலையின் ஓரமாக நின்று செல்போன் பேசியதால் ஏற்பட்ட தகராறில் இருசக்கர வாகன ஓட்டி மீது கார் ஓட்டுனர் தாக்குதல் நடத்தக்கூடிய பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
தன்னை தாக்கிவிட்டு செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தையும் உடைத்ததாக காவல்நிலையத்தில் புகார் வந்த நிலையில் இரு தரப்பிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தி நகர் ஹபிபுல்லா சாலை பகுதியை சேர்ந்தவர் பாண்டிமுத்து, பைனான்சியராக உள்ளார். இவர் நேற்று இரவு தணிகாச்சலம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கின் அருகே சாலையின் ஓரமாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, செல்போன் பேசி கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த இன்னோவா காரில் வந்த நபர்கள் ஓரமாக நின்று செல்போன் பேசுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் காரில் இருந்து இறங்கிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்த பாண்டிமுத்துவை சரமாரியாக தாக்கியுள்ளனர். அருகில் உள்ள பொதுமக்கள் தடுத்த நிலையில் காவல்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த போது செல்போனையும் பிடுங்கி உடைத்துள்ளனர்.
மேலும் இருசக்கர வாகனத்தையும் உதைத்து கீழே தள்ளியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மாம்பலம் போக்குவரத்து போலீசார் இருதரப்பையும் காவல்நிலையம் அழைக்கும் போதே பாண்டியை ஆபாசமாக பேசி போலீசார் முன்னிலையிலே காரில் வந்த நபர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அங்கிருந்த சிலர் செல்போனில் எடுத்த வீடியோ ஆதாரங்களோடு மாம்பலம் காவல்நிலையத்தில் பாண்டிமுத்து புகார் அளித்துள்ளார். காரில் வந்த இரண்டு நபர்களையும் பிடித்து மாம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒருவர் மதுபோதையில் இருப்பதாக கூறப்படுகிறது.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய நபர் வேளச்சேரியை சேர்ந்த பில்டர் ஆன சரவணன் மூர்த்தி வயது 61 மற்றும் அவரது கார் ஓட்டுநர் சுதாகர் என்பதும் தெரிய வந்தது.
மேலும் இரு தரப்பிடமும் மாம்பலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரில் இருந்து இறங்கி இருசக்கர வாகன ஓட்டியை சரமாரியாக தாக்கக்கூடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.